சென்னையில் ஊர்வலகமாக சென்று விநாயகர் சிலைகள் கரைக்க சிறப்பு ஏற்பாடு
சென்னையில் ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகள் கரைக்க சிறப்பு ஏற்பாடு
காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published : September 20, 2026 at 8:01 AM IST
சென்னை: சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, கடலில் கரைப்பதற்கு காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வதற்காக சென்னையில் மட்டும் 1,562 விநாயகர் சிலைகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. அந்த வகையில், பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்றைய தினம் (செப்டம்பர் 20) அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.
விநாயகர்களை சிலை கரைப்பதற்கு சென்னையில் சீனிவாசபுரம்-பட்டினப்பாக்கம், பல்கலைநகர்-நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர்-பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய நான்கு கடற்கரை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதை முன்னிட்டு, சென்னை பெருநகர் முழுவதும் 16,500 காவலர்கள், 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் கொண்ட சிறப்பு பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விநாயகர் சிலைகளை காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே எடுத்து செல்லப்பட வேண்டும், வாகனங்களில் கொண்டு சென்று அவர்களுக்குரிய சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளனர்.
சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகளை கரைப்பதற்கு உபகரணங்கள் மட்டுமின்றி, படகுகள் உதவி கொண்டும் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெரிய விநாயகர் சிலைகளை கிரேன் உதவியுடன் கடலுக்குள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் வாயிலாக பைனாகுலர்கள் மற்றும் டிரோன் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மற்றும் மணலில் பயணிக்கும் பிரத்யேக வாகனங்கள் மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும் குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதவிர, சிலைகள் கரைக்கும் பணிகளை கண்காணிக்க நான்கு வாட்ச் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் சிலைகளை கடலில் கரைப்பதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன், சிலைகள் கரைப்பதற்காக பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கடலுக்குள் செல்லாத வகையில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களையும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலான நடைமுறைகளையும் பின்பற்றி விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.