📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 12:03 PM

ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரிப்பு; சரி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரிப்பு; சரி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: ''ஆவின் பால் தட்டுப்பாட்டை, உடனடியாக சரி செய்ய வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தலைமையில், நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில், ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், ஆவின் நிர்வாக இயக்குனர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக, அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 14 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் அமைச்சர் விஜயலட்சுமி பேசியதாவது:

பால் உற்பத்தியாளர்களுக்கு, பணப்பட்டுவாடா நிலுவையின்றி, மின்னணு சேவைகள் வாயிலாக வழங்க வேண்டும். பால் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை, பால் உற்பத்தியாளர்களுக்கு சென்றவடைவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பால் கொள்முதல் செய்யப்படும் இடத்திலேயே, தரப்பரிசோதனை செய்து, அதற்கான ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும்.

கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், கால்நடை காப்பீடு ஆகியவற்றை விரைவுப்படுத்த வேண்டும். கால்நடை தீவனங்களை தடையின்றி வழங்க வேண்டும். பால் தட்டுப்பாட்டை விரைந்து சரி செய்ய வேண்டும். பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க வேண்டும். ஆவின் பாலகங்களில், பிற நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.