தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: ‘தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது, அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசரகதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன.
இந்நிலையில், இன்று செய்தித்தாள் ஒன்றில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, எஸ்ஐஆர்-க்குப் பின்பு நடந்த அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, ரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பிர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் ஆணையத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தும் அவர்கள் புறக்கணிப்பட் டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத் துள்ளது.
சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையோடும் - அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பின் மீது மிகப்பெரும் களங்கம் படிந்துள்ளது. ‘‘நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்து கூட எங்களுக்குத் தெரியவில்லை.
தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர் களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் சேர்க்க முடியவில்லை.
அதைச் செய்வதற்கான ஈஆர்ஓ நெட் வலைதளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது’’ என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால், தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
எனவே, ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். எஸ்ஐஆர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்து நடவடிக்கைகளும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பான வர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.