📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 24, 2026 02:04 PM

‘ஜெம்’ வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி ஜாமீன் மனு மீது மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க உத்தரவு

‘ஜெம்’ வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி ஜாமீன் மனு மீது மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க உத்தரவு

போக்சோ வழக்கில் கைதான கிரானைட் தொழிலதிபர் வீரமணி

சென்னை: ‘ஜெம்’ வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருவரும் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்களில், ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்து, 29-ம் தேதி தான் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 6 ஆண்டுகள் தாமதமாக 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி இந்திய குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரில், 2025-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாமதத்துக்கு எந்த விளக்கமும் இல்லாததால், வழக்கில் சந்தேகம் எழுந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இவரும் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை; புகார்தாரர் பாதிக்கப்பட்டவரோ, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரோ, பாதுகாவலர்களோ அல்ல; பாதிக்கப்பட்ட எந்த சிறுமியும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை; வழக்கில் காவல் துறையினர் தான் சாட்சிகளாக உள்ளனர்; அவர்களின் வாக்குமூலங்கள் காவல் துறை வசம் தான் உள்ளன என்பதால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பில்லை; கைது செய்து 24 மணி நேரத்துக்கு பிறகே தங்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் நெருங்கும் நிலையில் இதுவரை தங்களை காவலில் வைத்து விசாரிக்கக் கோரி காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யாததாலும், ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுவிட்டதாலும், தொடர்ந்து தங்களை சிறையில் அடைத்து வைத்திருக்க அவசியமில்லை என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி பத்மா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களை நீதிமன்ற காவலில் அடைப்பதில் எந்த தாமதமும் இல்லை. அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு, விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுவுக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.