ரூ.2,000
ரூ.2,000-க்கு மேற்பட்ட யு.பி.ஐ பரிவர்த்தனைக்குக் கட்டணம்... உங்கள் கருத்து என்ன?
இந்தியாவில் வரும் அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு கூகுள் பே உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2000-க்கும் கூடுதலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மொத்த மதிப்பில் 0.40% கட்டணம் (அதிகபட்சம் ரூ.300) வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. `இது வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படும்; தனிநபர்களுக்கு பாதிப்பு இல்லை. மாதம் ரூ.1 லட்சம் வரை யு.பி.ஐ மூலம் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கும் பாதிப்பில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. `ஆனால், வணிகர்கள் விலையை உயர்த்தி இந்தக் கட்டணத்தை பொதுமக்கள் மீதுதான் சுமத்துவார்கள். எனவே, மத்திய அரசு இதைக் கைவிட்டு, தற்போதுள்ள வெளிப்படையான பணப்பரிமாற்ற நடைமுறையையே தொடர வேண்டும்’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள் சிலர். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...
அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம்.வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...
வங்கித்துறை ஏற்கெனவே மக்களிடம் கட்டணம், அபராதம் என்று கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. இப்போது, யுபிஐ-க்கு கட்டணம் என்ற பெயரில் அடுத்த கொள்ளைக்குத் தயாராகிவிட்டது.
`யு.பி.ஐ கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, தனிநபர்களுக்கு இல்லை’ என்கிறது மத்திய அரசு. ஆனால், வணிகர்கள் அந்தக் கட்டணத்தை பொருள்களின் மீது வைத்துவிடுவார்கள். ஆக, யு.பி.ஐ கட்டணத்தால் பாதிக்கப்பட இருப்பவர்கள் மக்களே.
`மாதம் ரூ.1 லட்சம் வரை யு.பி.ஐ மூலம் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கு பாதிப்பில்லை’ என்கிறது மத்திய அரசு. ஆனால், ஒரு லட்சத்துக்கு மேல் வணிகம் செய்யும் வணிகர்களிலும் 30%, 40% லாபம் பார்க்கும் தொழில் துறைகளும் உள்ளன, 5%, 10% லாபம் பார்க்கும் துறை களும் உள்ளன. குறைவான சதவிகித லாபத்தில் தொழில் செய்துகொண்டிருக்கும் வணிகர்களுக்கு இது சுமையாக அமையும்.
பெரு முதலாளிகளின் பல லட்சம் கோடி வாராக் கடனைத் தள்ளுபடி செய்வார்கள். பொதுமக்களின் பர்ஸ்களில் இருந்து வழிப்பறி செய்வார்கள்.
இதனால் பலரும், பழையபடி பணத்தைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு மாறக்கூடிய சூழலை, அரசே உருவாக்குகிறது.
மத்திய அரசு, மக்களை டிஜிட்டல் டிரான் ஸாக்ஷன், கேஷ் லெஸ் டிரான்ஸாக்ஷனை நோக்கி நகர ஊக்குவித்தது. அது வெற்றிகரமாக நடந்தது. இந்தியாவின் யு.பி.ஐ முறை உலக அளவில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. உலகத்தில் நடக்கும் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரி வர்த்தனைகளில் பாதிக்கும் மேல் இந்தியாவின் யு.பி.ஐ மூலமாகவே நடைபெறுகிறது. அந்தளவுக்கு மக்களை யு.பி.ஐ பயன்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு, இப்போது அதற்குக் கட்டணம் வசூலிப்பது திட்டமிட்டு மக்களைக் கொள்ளையடிக்கும் செயல்.
நான் சம்பாதிக்கும் பணத்துக்கு வரி கட்டுகிறேன். கூடவே, இப்படி ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் வரி கட்டச் சொல்வதில் என்ன நியாயம்?