📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 22, 2026 03:03 AM

கொள்முதல் விலை உயர்த்தியும் பால் தட்டுப்பாடு; காலநிலை மாற்றம் என்கிறது ஆவின்

கொள்முதல் விலை உயர்த்தியும் பால் தட்டுப்பாடு; காலநிலை மாற்றம் என்கிறது ஆவின்

சென்னை: 'கொள்முதல் விலை உயர்த்தியும் பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதற்கு, காலநிலை மாற்றமே காரணம்' என, அரசிடம் ஆவின் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, ஆவின் நிறுவனம் வாயிலாக நாள்தோறும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதில், 15 லட்சம் லிட்டர் பால், சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து, இந்த கொள்முதல் நீடித்து வந்தது. தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கடலுார் என, பல்வேறு மாவட்டங்களிலும் ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் அருந்தும், கொழுப்பு சத்து குறைவான நீல நிற பால் பாக்கெட் கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில், நிறை கொழுப்பு உள்ள ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டும் கிடைப்பதில்லை. ஊதா நிற பால் பாக்கெட் மட்டுமே கிடைத்து வருகிறது. இதை காய்ச்சும்போது நுரையுடன் லேசான மருந்து வாடை வருவதாக கூறி, பலரும் வாங்க தயங்குகின்றனர். ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு கொள்முதல் குறைந்தது காரணம் என, பால்வளத் துறை அதிகாரிகள், அரசிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 1ம் தேதி முதல் பால் கொள்முதல் விலையை, அரசு உயர்த்தியுள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 44 ரூபாய், எருமை பாலுக்கு 53 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதத்தை விட, ஒரு லிட்டர் பாலுக்கு எட்டு ரூபாய் கூடுதல் விலை, உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகும், பால் தட்டுப்பாடு தொடர்கிறது. இதுகுறித்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து பால் வளத்துறை செயலர் மற்றும் கமிஷனரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. காலநிலை மாற்றம் காரணமாகவே, பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பால் கொள்முதல் குறைந்ததற்கு, துறை அதிகாரிகள்தான் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து, ஆவின் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:பல்வேறு மாநிலங்களில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. பால் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், லிட்டருக்கு 10 ரூபாய் வரை லாபம் பார்க்கின்றன. ஆவின் குறைந்த விலையில் பால் வழங்கி வருகிறது. இதனால், ஏற்படும் நஷ்டத்தை குறைக்க, அரசு 720 கோடி ரூபாயை தற்போது வழங்கியுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி, ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முடியும். ஆனால், ஆவினுக்கு வர வேண்டிய பாலை, தனியாருக்கு திருப்பும் பணியில், பால் கூட்டுறவு சங்க அதிகாரிகள், அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசு வழங்கிய பணத்தை, புதிய பால் கொள்முதலில் முதலீடு செய்யாமல், நிலுவை கொள்முதல் கடன்களை அடைக்க பயன்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள், த.வெ.க., ஆட்சியில் மாற்றம் செய்யப்பட்டனர்.

பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆவின் அதிகாரிகள், சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி, லாபம் பார்த்து வருகின்றனர். இவர்களை கண்டறிந்து மாற்றினால் மட்டுமே, ஆவின் பால் கொள்முதல் அதிகரிக்கும்.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

'ஹட்சன்' நிறுவனம் வாயிலாக, 'ஆரோக்கியா' பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பால் விலை, தற்போது லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் நிறைகொழுப்பு ஆரோக்கியா பாலின் விலை, 86 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு லிட்டர் தயிர் விலை, இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு லிட்டர் தயிர் விலை 88 ரூபாயில் இருந்து, 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஹட்சன் நிறுவனத்தை தொடர்ந்து, மேலும் பல தனியார் நிறுவனங்களும் பால், தயிர் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆவின் பால் தேவை அதிகரிக்கும் என்பதால், மேலும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது