ரேஷன் பொருட்கள் வழங்கல் தடைபடாது: தமிழக அரசு உறுதி
சென்னை: 'தமிழகத்தில், இ.கே.ஓய்.சி., எனப்படும் விரல் ரேகை பதிவு உண்மை சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்படாத கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவது முடக்கப்பட மாட்டாது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எந்த ஒரு கார்டுதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ, தடை செய்யவோ கூடாது என, அனைத்து வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு, ஆறு மாதங்களுக்கு மேல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை கார்டுதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை, இன்று முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா கார்டுதாரர்களின் இ.கே.ஒய்.சி., சரிபார்ப்பு பணி, 96.69 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்கள் வாயிலாக, ஜூலை மாதத்தில், 95.44 சதவீதமாக இருந்த இ.கே.ஓய்.சி., சரிபார்ப்பு பணி, செப்., 30ல், 96.69 சதவீதமாக உயர்ந்தது. இந்த சிறப்பு முகாம்களில், 4.49 லட்சம் பேர் பயன் பெற்றனர்.
எனினும் இ.கே.ஒய்.சி., பணியை மேற்கொள்ளாத கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, விரல் ரேகை, கருவிழி சரிபார்ப்பின் வாயிலாக, இ.கே.ஒய்.சி., தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.