இளையராஜா முன்னாடி நிக்கணும்.. கானா பாட்ட சினிமாவுக்குள் கொண்டு வந்தது இதற்காகத்தான்.. தேவா பளிச்!
சென்னை: இளையராஜாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான 28வது ஆள் நான். இளையராஜா அப்போ மட்டும் இல்லை, இன்னைக்கு அவர் தான் ராஜா. அவர் முன்னாடி நிற்க முடியாமல் 27 இசையமைப்பாளர்கள் காணாமல் போய் விட்டனர்.
ஒரு பக்கம் இளையராஜா, இன்னொரு பக்கம் ஏ.ஆர். ரஹ்மான் வெஸ்டர்ன் மியூசிக் உடன் வந்து அசத்துறாரு. இவங்க 2 பேருக்கும் இடையே நிற்க வேண்டும். நான் கொஞ்சம் கிராமத்து இசை போட்ட இளையராஜா சாயல் என பத்திரிகையில் போட்டு அடிப்பாங்க.. கொஞ்சம் வெஸ்டர்ன் கலந்தா ஏ.ஆர். ரஹ்மானை தொட பார்க்குறாருன்னு சொல்வாங்க..
நமக்குன்னு ஒரு அடையாளத்தை கொண்டு வரணும்னு நினைச்சுத்தான் அந்தோனியையும் அல்போன்ஸையும் கொண்டு வந்தேன். அவர்கள் வேறு யாருமில்லை என் பாலிய சிநேகிதர்கள் தான். அவர்கள் மூலமாகத்தான் கானாவை கற்றுக் கொண்டு சினிமாவில் இதை பாடலாக மாற்றலாமே என சலோமியோ உள்ளிட்ட பாடல்களை போட்டேன் என மீசைய முறுக்கு 2 சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் தேனிசை தென்றல் தேவா கலந்துக் கொண்டு கானா பாடல்களை சினிமாவுக்கு கொண்டு வந்தது ஏன் என்பது குறித்து விளக்கினார்.
அது ரொம்ப ஈஸி இல்லை: கானா பாடல்களை சினிமாவுக்கு கொண்டு வருவது ரொம்பவே கஷ்டம். அது ஈசியாலாம் நடக்கல. தயாரிப்பாளர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். இயக்குநர்களுக்கு நம்முடைய கருத்து பிடிக்க வேண்டும். படத்தில் அந்த சூழல் பொருந்தி வர வேண்டும். ஹீரோ முக்கியமா ஓகே சொல்லணும். அப்போதான் நாம ஒரு பாட்டை உள்ளே வைக்க முடியும். அந்த சமயத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தன. ஆனால், அதை பெரிதாக தொடர முடியாத சூழலும் உருவானது. தற்போது மீண்டும் கானா இசை தமிழ் சினிமாவில் ஒலிக்க கேட்பதே நல்லா இருக்கு என படக்குழுவினரையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியையும் பாராட்டி வாழ்த்திச் சென்றார் தேவா.
முத்தமிட்டு பாராட்டு: முன்னதாக தேவாவை சந்தித்து ஹிப்ஹாப் ஆதி ஆசிர்வாதம் வாங்கிய காட்சிகளும், அவருக்கு அன்பு முத்தம் கொடுத்த போட்டோக்களும் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சுந்தர். சி படங்களில் கானா பாடலை வைக்க அனுமதித்தார் என்றும் தேவா பேசினார்.