இஸ்லாமிய வாரிசுரிமைத் திட்டமிடலுக்கு உதவ புதிய முயற்சிகள் அறிமுகம்
முஸ்லிம் குடும்பங்களுக்கு இஸ்லாமிய வாரிசுரிமைத் திட்டம் குறித்த புரிதலை அதிகரித்து அச்செயல்பாட்டை எளிமையாக்க மூன்று முயற்சிகள் அறிமுகம் காண்கின்றன.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற இஸ்லாமிய வாரிசுரிமைத் திட்ட ஒன்றுகூடலின்போது (Islamic Legacy Planning Village) அம்முயற்சிகள் அறிவிக்கப்பட்டன.
உள்துறை, வெளியுறவு துணை அமைச்சரும் இஸ்லாமிய வாரிசுரிமைத் திட்டமிடல் செயற்குழுத் தலைவருமான ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முதலாவதாக, இஸ்லாமிய வாரிசுரிமைத் திட்டமிடல் வழிகாட்டிப் புத்தகத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான ‘தி ஃபைனல் அமானா 2.0’வை (The Final Amanah 2.0) சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) அறிமுகப்படுத்தியது.
2025ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அப்புத்தகம் சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
சமூகத்தினர், துறைசார்ந்த நிபுணர்களின் கருத்துகளைத் திரட்டி, குடும்பங்கள் தங்களின் சொத்துத் திட்டமிடல் வாய்ப்புகளைப் புரிந்துகொள்ளவும் சீரான வழிகாட்டுதலைப் பெறவும் உதவும் வகையில் பொருத்தமான, எளிதில் அணுகக்கூடிய தகவல்களைப் புதிய பதிப்பு வழங்குகிறது.
இரண்டாவதாக, இஸ்லாமிய சொத்துத் திட்டமிடல் பயிற்சித் திட்டம் (ILP Masterclass), சமய ஆசிரியர்களையும் கடந்து, சொத்துத் திட்டமிடல் சமூகத்தில் உள்ள பிற துறைசார்ந்த நிபுணர்களுக்கும் விரிவாக்கப்படும்.
2026 மே மாதத்தில் சமய ஆசிரியர்கள் துறையில் முன்னோடியாகத் தொடங்கப்பட்ட சுய கற்றல் திட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
குடும்பங்கள் சிறப்பான வழிகாட்டுதல் பெறுவதை உறுதிசெய்ய இஸ்லாமிய சொத்துத் திட்டமிடல் பற்றிய ஆழமான புரிதல் கொண்ட அதிக நிபுணர்களை உருவாக்குவதை இந்த விரிவாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூன்றாவதாக, சொத்துத் திட்டமிடலில் அடுத்த அடியை எடுத்து வைக்கத் தயாராக இருப்போர்க்கும் குடும்பங்களுக்கும் உதவும் வகையில், புதிய இஸ்லாமிய வாரிசுரிமைத் திட்ட சேவைப் பங்காளிகள் அமைப்பு (ILP Service Partners Network) ஒன்றை முயிஸ் அமைத்துள்ளது.
அவ்வமைப்பு வசியத் (உயில்) தயாரித்தல் உட்பட குடும்பங்கள் தங்களின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் துணைபுரியும் நம்பகமான சட்ட நிபுணர்களையும் பிற பங்காளிகளையும் ஒன்றிணைக்கும்.
அறிமுகமாகும் இந்த மூன்று புதிய முயற்சிகளும் முஸ்லிம் குடும்பங்களுக்கு விரிவான தகவல்கள், மேம்பட்ட வழிகாட்டுதல், தெளிவான திட்டமிடல் பாதைகள் ஆகியவற்றை வழங்கும் நோக்குடன் வகுக்கப்பட்டுள்ளன.
“முஸ்லிம் குடும்பங்களுக்குச் சிறந்த சொத்துத் திட்டமிடல் என்பது சிக்கலானதாகவோ அவற்றுக்கு எட்டாத ஒன்றாகவோ இருந்துவிடக்கூடாது. அது குடும்பங்கள் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் கலந்துரையாடக்கூடியதாகவும் தன்னம்பிக்கையுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
“சொத்துத் திட்டமிடல் என்பது அவர்கள் தனியாகச் செய்ய வேண்டிய ஒன்றன்று. மாறாக, பங்காளிகளுடனும் நிபுணர்களுடனும் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதை அறிந்து மக்கள் நிம்மதி கொள்ளலாம்,” என்று திரு ஸுல்கர்னைன் கூறினார்.
மூன்றாம் முறையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மொத்தம் 500 பேரும் இவ்வாண்டு முதன்முறையாக அறிமுகமான துறைசார்ந்த நிபுணர்கள் கருத்தரங்கில் (Practitioners’ Network Forum) 150 பேரும் கலந்துகொண்டனர்.