ராகுல் காந்தி
சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, சனிக்கிழமை (அக்டோபர் 10) சென்னைக்கு வருகை தந்து தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது ராகுல் காந்திக்கு சிறப்பு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த ராகுல் காந்தியை, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கிருந்து நேரடியாக நீலாங்கரையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்குச் சென்றார் ராகுல் காந்தி.
விஜய் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்றிருந்தார். அதன் பிறகு இரு தலைவர்களும் நேரில் இப்போதுதான் சந்தித்துள்ளனர்.
மதிய விருந்தின்போது, இரு தலைவர்களும் தங்களின் அரசியல் கூட்டணி அடுத்தகட்ட உத்திபூர்வ நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இச்சந்திப்பைத் தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் ‘மாணவர்கள் குரல்’ என்ற நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்றும் தமிழகம், புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்துவார் என்றும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சென்னைக்கு வருகை தரும் நிலையில், அதற்கு முன்பாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.