"இனி இந்திய அணியில் ஆடாவிட்டாலும் நஷ்டமில்லை".. புவனேஸ்வர் தேர்வு பற்றி முகமது ஷமி ஓபன் டாக்
"இனி இந்திய அணியில் ஆடாவிட்டாலும் நஷ்டமில்லை".. புவனேஸ்வர் தேர்வு பற்றி முகமது ஷமி ஓபன் டாக்
கொல்கத்தா: "இனி இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் எந்த நஷ்டமும் இல்லை" என்று மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அதிரடியாக பேசி இருக்கிறார். நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஷமி இவ்வாறு கூறி இருக்கிறார்.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் இந்திய டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வரும் முகமது ஷமிக்கும் இந்திய தேசிய அணியில் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முகமது ஷமி, "புவனேஸ்வர் குமாருக்கு இந்திய அணியில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. அது அவருக்கு நல்லது. ஆனால் அவரது தேர்வு பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனக்கு எங்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். தற்போது எனது முழுக் கவனமும் ரஞ்சி கோப்பை போட்டியில் மட்டுமே உள்ளது.
கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாகவே என்னைப் புறக்கணிக்கும் விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெங்கால் அணிக்காக நான் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி எனது உடற்தகுதியை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒருவேளை எனக்கு இனி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போனால், அதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை" என்று முகமது ஷமி வெளிப்படையாகத் தெரிவித்தார். அதாவது தன்னை அணியில் சேர்க்காதது இந்திய அணிக்கு தான் இழப்பு என அவர் சூசகமாக கூறி இருக்கிறார்.
முகமது ஷமி கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், ஷமியின் உடற்தகுதியைக் காரணம் காட்டி அவரைத் தொடர்ந்து அணியில் சேர்க்காமல் புறக்கணித்தார்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய இளம் பந்துவீச்சாளர்கள் 250 ரன்களை வாரி வழங்கிய சூழலில், ஷமி போன்ற அனுபவ வீரர்களின் முக்கியத்துவம் மீண்டும் பேசப்படுகிறது. ஆனால் தேர்வுக்குழுவின் புறக்கணிப்பைப் பற்றி கவலைப்படாமல் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவதாக ஷமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.