புதிய தலைமை செயலகம் கட்ட 'வாஸ்து' கணக்கால் அதிகாரிகள் திணறல்
- நமது நிருபர் -
புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில், இறுதி முடிவு எடுக்க முடியாமல், தமிழக வெற்றிக் கழக அரசு திண்டாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள, முதல் வர் விஜய் வீடு அருகே, புதிய தலைமைச் செயலகம் கட்ட, கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப் பட்டு, சட்டசபையில் முதல் வர் விஜய் அறிவித்தார்.
அதன்படி, 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் போராடி வருகின்றனர்.
த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனால், தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அடுத்தக்கட்ட பணிகளை, மேற்கொள்ள முடியாமல், பொதுப்பணித்துறை திணறி வருகிறது.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தலைமைச் செயலகம் கட்ட, சென்னைக்குள் இடம் பார்க்க வேண்டும் என, முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டது. அதன்படி, கிண்டி ரேஸ் கோர்ஸ், கிண்டி நெடுஞ்சாலைத்துறை வளாகம், சிந்தாதரிபேட்டை பல்லவன் இல்லம், தீவுத்திடல், கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள இடம், சேப்பாக்கம் எழிலகம் வளாகம் என பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆனால், முதல்வரின் விருப்பப்படி, பட்டினப்பாக்கம் இறுதி செய்யப்பட்டது. தற்போது எதிர்ப்பு அதிகமாக வருவதால், அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், 'எதற்கும் மாற்று இடத்தை பார்த்து வையுங்கள்' என முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தல் வந்தது. அதன்படி, ஏற்கனவே பரிந்துரையில் இருந்த, பல்லவன் இல்லம் இடம் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், 'அதன் அருகே கல்லறை தோட்டம் இருப்பதால், வாஸ்துபடி கெட்ட அதிர்வு இருக்கும். அது சரிவராது' என முதல்வர் அலுவலகம் நினைக்கிறது. சேப்பாக்கம் எழிலகத்தின் பின்னால் கட்டலாம் என பரிந்துரைத்தபோது, கிழக்கு திசை நோக்கி கட்டுமானம் கட்ட வழியில்லை என்கின்றனர்.
முதல்வருக்கு சாதகமாக அமைய, வாஸ்துபடி கடல் அருகே இருக்க வேண்டும் என்பதால், தீவுத்திடல் மட்டும் பரிந்துரையில் உள்ளது.
தலைமைச் செயலகம் போன்ற பெரிய அளவில் கட்டுமானம் கட்டும்போது, அது வசதியாக இருக்கிறதா என்றுதான் துறை பார்க்கும். ஆனால், வாஸ்து, திசை, கடல் அருகே இருக்க வேண்டும், கல்லறை போன்ற எதுவும் இருக்கக் கூடாது என, பல கட்டுப்பாடுகளை, முதல்வர் அலுவலகம் விதித்துள்ளது.
இதனால், அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய, இடம் கிடைக்காமல், அரசு நிர்வாகம் திண்டாடி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.