நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்
சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது அம்பிகாவின் தங்கையும், நடிகையுமான ராதா புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அம்பிகா கொடுத்துள்ள புகாரின் விவரம்: நான் ‘ஏஆர்எஸ் கார்டன்ஸ்’ என்ற பெயரில் ஒரு தொழிலில் செய்து வந்தேன். அதற்காக போரூரில் உள்ள தனியார் வங்கியில் அந்நிறுவனத்தின் பெயரில் நடப்புக் கணக்கும் வைத்திருந்தேன். நான் அடிக்கடி பயணத்தில் இருப்பதால், கார்டனின் பராமரிப்பு, மின்கட்டணம், பணியாளர்கள் சம்பளம் போன்ற பராமரிப்புச் செலவுகளுக்காக பணம் எடுக்க தொகை நிரப்பப்படாத எனது கையெழுத்திட்ட ஐந்தாறு காசோலைகளை சென்னையில் நான் தங்கும் வீட்டில் வைத்துச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு எனது தொழில் நிறுவனத்தின் பெயரை ‘ஆர்ஆர் கார்டன்ஸ்’ என மாற்றிவிட்டேன். இந்தத் தகவல் வங்கிக்கும் தெரிவித்து அந்தப் பெயரில் நடப்புக் கணக்கு தொடங்கி இருந்தேன்.
என் பழைய கணக்கு எண் காசோலை புத்தகங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்ட நான், காலப்போக்கில் அந்தக் கையெழுத்திட்ட காசோலைகள் குறித்து மறந்து விட்டேன்.
இந்த நிலையில், எனது பழைய வங்கிக் கணக்கு காசோலைகள் மூலமாக பணப்பரிமாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அம்பிகா என்ற பெயரில் அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் செப்டம்பர் 17-ம் தேதி வங்கியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
அந்தக் காசோலைகளை நான் எனது சகோதரியிடம் ஒரு போதும் கொடுக்கவில்லை. அப்படி ஒரு பணப்பரிமாற்றம் தேவைப்படும் எந்த ஒரு நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை.
அந்தக் காசோலைகளை எங்களின் சகோதரர் மல்லிகார்ஜுனா நிரப்பி இருக்கிறார். அவரும், சகோதரி அம்பிகாவும் இணைந்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சொத்தில் தனது பங்கைப் பெறுவதில் தனது சகோதரியும், சகோதரரும் தன்னைத் தடுத்ததாகவும் ராதா குற்றம்சாட்டியுள்ளார்.