📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 29, 2026 08:01 PM

படம் மறந்தாலும்...பாட்டை மறக்க முடியுமா? ‘தையரத்தய்யா’ சொல்ல வைக்கும் இளையராஜா!

படம் மறந்தாலும்...பாட்டை மறக்க முடியுமா? ‘தையரத்தய்யா’ சொல்ல வைக்கும் இளையராஜா!

படம் மறந்தாலும்...பாட்டை மறக்க முடியுமா? ‘தையரத்தய்யா’ சொல்ல வைக்கும் இளையராஜா!

1978-ல் வெளியான ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தின் பாடல்களையும், குறிப்பாக ‘சித்திரச் செவ்வானம்’ பாடல் ஏற்படுத்திய மறக்க முடியாத இசை அனுபவத்தையும் நினைவுகூரும் பதிவு.

படம் அவுட்டு...பாட்டு ஹிட்...வி-ராம்ஜி

’இசைப்பேரரசி’ என்று எல்லோராலும் கொண்டாடப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ‘பயோபிக்’ இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. 1945ம் ஆண்டு ‘மீரா’ எனும் திரைப்படம் வெளியானது. எஸ்வி வெங்கட்ராமன் இசையில் உருவான இந்தப் படத்தில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய, ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற பாடலுக்காகவும் ஏனைய பாடல்களுக்காகவும் ‘மீரா’ கொண்டாடப்பட்டாள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வாம்சக்குரலில் கவலைகளையெல்லாம் கரைந்துவிட்ட உணர்வில் தமிழ்க்கூட்டம் திளைத்துக் கொண்டாடியது. 1978ம் ஆண்டில், தமிழ்க்காற்று இளையராஜாவின் இசையுடன் இரண்டறக்கலந்து, பட்டிதொட்டியெங்கும் வீசிக்கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் முத்துராமன் நடித்த திரைப்படம் வெளியானது. படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்பு ‘காற்றினிலே வரும் கீதம்’.

இது, படத்துக்காக வைக்கப்பட்ட தலைப்பாக இருக்கலாம். ஆனால், அது இளையராஜாவுக்காக வைக்கப்பட்ட தலைப்பு என்பதை காலங்கள் கடந்தும், அந்தப் பாடல்கள் இன்றைக்கும் கட்டியம் கூறிக்கொண்டே இருக்கின்றன.

விஜயபாஸ்கர் என்றொரு இசையமைப்பாளர் உண்டு. பஞ்சு அருணாசலம் படங்கள் எடுக்கத் தொடங்கியதும் மெல்லிசை மன்னரிடம் செல்லவில்லை. விஜயபாஸ்கரை துணைக்கு வைத்துக்கொண்டார். ஆனால் ‘நமக்குன்னும் இந்த சினிமாவுக்குன்னும் வசமா ஒரு ஆள் வராமலா போயிருவான்? அப்படி ஒருத்தன் வருவான். தமிழ் சினிமாவை தன் மியூஸிக்கால ஆளுவான்’ என்பதில் தீர்க்கமாக இருந்தார். இந்த ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தின் தயாரிப்பாளரும் விஜயபாஸ்கர்தான். ஆனால் அவர் வேறு, இவர் வேறு போல...!

படத்துக்கு அறிமுக நாயகி. அவர்தான் கவிதா. பேரழகி என அப்போது எல்லோராலும் கொண்டாடினார்கள். ‘மாப்ளே... என் கனவுல நேத்து கவிதா வந்துச்சுடா’ என்று நண்பர்கள் தங்கள் எண்ணமே கனவென்பதையெல்லாம் உணராமல் சொல்லுவார்கள். ‘சரி, கவிதா பேயா வந்துச்சா? எப்படி வந்துச்சு?’ என்று கேலி செய்வார்கள் நண்பர்கள். அதற்குக் காரணம்... ‘காற்றினிலே வரும் கீதம்’ திரைப்படம்தான். மூன்றுவிதமான கேரக்டர்கள், பெயர்கள். அதுவும் முத்துராமனின் வாழ்க்கைக்குள் வரும்போது, ‘இளங்கன்று பயமறியாது’ என்பதை எவன்யா சொன்னான்? நானெல்லாம் கிடுகிடுத்து, ‘முருகா முருகா முருகா’ என்று உச்சரித்துக்கொண்டே, ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தேன்.

பொன்மலைப்பட்டி சரவணா தியேட்டர் அப்போது டூரிங் டாக்கீஸ்தான். மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும்தான் காட்சிகள். நானும் என் நண்பன் தசரதனும்தான் மாலைக்காட்சிக்குப் போனோம். பயபுள்ள தசரதனுக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லை. அவர்கள் பெரியார் குடும்பம். ஆனால், இந்தப் பேய்ப்பிசாசு என்றால் ஜூரமே வந்துவிடும் அவனுக்கு! பத்தாவது வயதில், முக்கால்வாசி படத்துடன் தலைதெறிக்க ஓடிவந்தோம்.

தியேட்டரைச் சுற்றி, கருவேலமரங்களும் தோப்புகளும்தான். ரெண்டுகிலோமீட்டருக்குப் பிறகுதான் நாலாறு வீடுகள். இப்படி பேய்க்கு பயந்து ஓடிவந்த கதையை நண்பர்களிடம் சொன்னால், ‘ஷேம்ஷேம்’ சொல்லுவாய்ங்களே... என்று ‘சொல்லக்கூடாது’ என்று இருவரும் சத்தியம் வாங்கிக்கொண்டோம். ‘கடவுள் இல்லைன்னு சொல்றீல்ல தசா. உன்னையைத்தான் பேயும் கடவுளும் சேர்ந்து வந்து மிதிக்கப்போவுது’ என்று சகநண்பர்கள் எப்போதோ சொன்னதெல்லாம் நினைவுக்கு வர, அடுத்த நான்குநாளும் குளிர்ஜூரத்தில் சுருண்டுகொண்டான் தசரதன்.

ஆனால், அந்தப்படத்தை என் பதினெட்டாவது வயதில், மீசை முளைக்கத்தொடங்கிய காலத்தில், சரவணா தியேட்டரில் அன்றைக்குப் பார்த்தவன், இப்போது சண்முகா தியேட்டரில் பார்த்தேன். தற்காப்புக்காக, மேட்னி ஷோவுக்குப் போனேன். படத்தை முழுவதுமாகப் பார்த்துவிட்டு, யாராவது பார்க்கிறார்களா என்று நானும் அதே தசரதனும் தலையிலடித்துக் கொண்டு சிரித்தோம். தவிர, ‘கடவுள் இல்லைடா, அதேபோல பேயும் இல்ல’ என்கிற தெளிவுக்கு தசரதன் வந்துவிட்டிருந்தான். நாமதான் ‘உம்மாச்சி கண்ணைக்குத்தும்’ ஆளாச்சே! ஆனால், பயத்தையும் பீதியையும் குழப்பத்தையும் தவிப்பையும் போக்கியவர் இளையராஜாதான்! பஞ்சு அருணாசலம்தான் அத்தனை பாடல்களையும் எழுதியிருந்தார். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாகத் தந்து, நம்மையெல்லாம் சொக்கவைத்தார் இசைஞானி.

எல்லாப் பாடல்களும் ரசனைக்குரியவைதான். படம் பெரிய அளவில் மட்டுமல்ல... சிறிய அளவிலும் கூட கவனம் ஈர்க்கவில்லைதான். ஆனால், ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில், அதிலும் குறிப்பாக ஜெயச்சந்திரனின் குரலில் வருகிற பாட்டு, நாம் சைக்கிளில் பெடல் செய்து பயணித்தாலும், அப்படியே சைக்கிளுடன் அலேக்காகத் தூக்கி படகில் பயணிக்கவைத்துவிடும். அப்படியொரு பாட்டுதான்... ’சித்திரச்செவ்வானம்’ பாட்டு! ஜெயச்சந்திரனின் மெஸ்மரிஸக் குரலில் நமக்காகவே தனி வானத்தையே தரும் பாட்டு!

வயலினும் கிடாருமாகத் தொடங்கி இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஏதோ பேசிக்கொண்டிருக்கும். அப்போது வருகிற ‘தையரத்தய்யா தையரத்தய்யா தையரத்தய்யா தையரத்தய்யா’ எனும் கோரஸ் வார்த்தைகள், நம்மை அமைதியாக்கி, ஆனந்த அமிர்தத்தை ருசிக்கத் தயாராக்கிவிடும்.

சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்..என் முத்தான முத்தம்மாஎன் கண்ணான கண்ணம்மாஏ குர்ய எலவாலி தண்டெலவாலம்தையரத்தய்யா தையரத்தைய்யா

என்று ஜெயச்சந்திரன் பாடும்போது நாமும் ‘தையரத்தய்யா’ சொல்லி ஜோதியில் ஐக்கியமாகிவிடுவோம். அதையடுத்து வயலின் இழையும்; கிடார் குழையும். என்னென்னவோ செய்வார். ‘சூ மந்திரக்காளி’ மாதிரி ஏதோ செய்து நம்மை பாட்டுக்குள் மூழ்கடித்திருப்பார் இளையராஜா.

மையை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்முதன் முதலா தொட்டேனே வாய்க்காக்கரை ஓரம்சாயாமல் சாய்ந்தாளே மார்பிலேஅள்ளிக்கட்டும் கண்டாங்கி அரைகுறையா ஒதுங்கஅலுங்காம அணைச்சாளே வெதுவெதுப்பா மயங்கமஞ்சள் கண்ட கைகாரி மயக்கிவிட்டா என்னைஏ குர்ய எலவாலி தண்டெலவாலம் தையரத்தைய்யா தையரத்தய்யா

வார்த்தைகளுக்கு மென்மை தடவுவது பஞ்சு அருணாசலம் அவர்களின் வழக்கம். அவரின் பெயருக்கு ஏற்றார்போலவே பஞ்சினும் மென்மையாக நீவிவிடுகிற வரிகள். மையிட்ட கண், மையல் தந்த நேரம், வாய்க்காக்கரை ஓரம், சாயாமல் சாய்ந்தாள் மார்பில், அள்ளிக்கட்டிய கண்டாங்கி அரைகுறையாக ஒதுங்கிய நிலை, அலுங்காமல் அணைத்தாள் வெதுவெதுப்பாய் மயங்க... என்றெல்லாம் சொல்லிவிட்டு ‘ஏ குர்ய எலவாலி தண்டெலவாலம் தையரத்தய்யா தையரத்தய்யா’ என்று சொல்லும்போது, மயங்கியது அவனும் அவளும் மட்டுமா?நாங்களும்தான் ராசா, நாங்களும்தான் ராசா... என்று திருச்சியில் இருந்தபடியே கோடம்பாக்கத்தை நோக்கிக் கத்தினோம்.

போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பாநான் திரும்பி வரும்வரையில் கரையினிலே நிப்பாஉணவில்லை உறவில்லை வாடுவாள்என் முகத்தைப்பார்த்ததுமே துள்ளித்துள்ளி வருவாமுத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித்தருவாசொக்கி சொக்கிச் சிரிப்பாளே சொக்கத்தங்கம் போலேஏ குர்ய எலவாலி தண்டெலவாலம்தையரத்தைய்யா தையரத்தய்யா

‘போயிட்டு வரேன்’ என்றால் ஏக்கமாகிவிடுவாளாம். கடலுக்குச் சென்று திரும்பி வரும்வரைக்கும் கரையிலேயே நிற்பாளாம். சாப்பிடமாட்டாள், தூங்கமாட்டாள், வாடிப்போய்விடுவாள். என் முகம் பார்த்ததும் துள்ளியோடி வருவாளாம். முத்தான முத்தங்களை அள்ளியள்ளித்தருவாளாம். சொக்கிச் சொக்கிச் சிரிப்பாள், சொக்கத்தங்கம். ‘ஏ குர்ய எலவாலி தண்டெலவாலம் தையரத்தய்யா தையரத்தய்யா’ என்று பாடும்வரைக்கும் வார்த்தைகளுக்கு இளையராஜா, அலங்காரம் செய்து தன் மெட்டுக்களால் ஊர்வலம் வரச்செய்திருப்பார்.

‘என் நண்பன் காஜா ஷெரீப், பள்ளித்தோழன். சைக்கிளில் நான்குகால்களுடன் மிதித்துக்கொண்டே நாங்கள் பயணிக்கும்போது, திடீரென இந்தப் பாடலைப் பாடுவேன். உடனே அவனும் சேர்ந்து பாடுவான். ஆனால் ‘சித்திரைச்ச்செவ்வானம்’ என்று பாடுவான். ‘டேய்... சித்திரைச் செவ்வானம் இல்லடா... அப்படீன்னா ஏப்ரல், மே மாதத்து வானம்னு அர்த்தம். சித்திரை இல்லை. சித்திரம்.ஓவியம். சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்’ என்று நான் என் மேதாவித்தனத்தை வெளிப்படுத்திய கித்தாப்பில், கூடுதல் பலம் கொடுத்து பெடல் செய்வேன். ஆனால், இப்போது கூட ‘சித்திரைச்செவ்வானம்’ என்றுதான் அவன் பாடுகிறான். ‘இல்லடா சித்திரச்செவ்வானம்’ என்று சொன்னால், ‘போடா, இவரு பெரிய கண்ணதாசன்’ என்று கேலி செய்வான்.

அவன் சொன்ன சித்திரையோ... நான் சொன்ன சித்திரமோ... நீங்கள் ஒருமுறை கேளுங்கள். உணருவீர்கள். புரிந்துகொள்வீர்கள். அடுத்த பத்துப்பதினைந்து நாட்களுக்கு ‘தையரத்தய்யா தையரத்தய்யா தையரத்தய்யா’ என்று ஜெயச்சந்திரனுக்கும் பஞ்சு அருணாசலத்துக்கும் நம்ம இசைராஜாவுக்கும் நன்றியுணர்வு பூரிக்க, இந்த கோரஸுக்குள் குடித்தனம் நடத்துவீர்கள்!