📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 09, 2026 10:03 PM

'பேருந்தில் அமர்ந்து கொண்டு எழுதும் பதிவு இது'

'பேருந்தில் அமர்ந்து கொண்டு எழுதும் பதிவு இது'

'பேருந்தில் அமர்ந்து கொண்டு எழுதும் பதிவு இது' - ஆண்களுக்கும் கட்டணம் குறைந்ததாக மகிழ்ச்சியை பகிர்ந்த இளைஞர்

தற்போது அனைத்து ஊர்களிலும் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதால் நெல்லையை அடைய 1 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் இந்த பணிக்கு செல்பவர்கள் பாதிக்கப்படலாம் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார்.

Published : October 8, 2026 at 3:28 PM IST

திருநெல்வேலி: மகளிர் வெற்றிப் பயண திட்டத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைந்திருப்ப்பதாக இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெற்றிப் பயணம் திட்டமானது அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநகர, நகர்ப்புற Ordinary, Express, L.S.S., Deluxe, புறநகர் Ordinary மற்றும் மலைப்பகுதி Ordinary சேவைகளில் மகளிர், சிறுமியர் மற்றும் திருநர் பயணிகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

இந்த நிலையில் இந்த வெற்றி பயண திட்டத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதாக கோமதி நாயகம் என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

அந்த பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருநெல்வேலிக்கு காலை 7:50 மணிக்கு தடம் எண் 165M என்ற பேருந்து புறப்பட்டு செல்கிறது. இந்த பேருந்தில் முன்பு Limited Stop Service என்ற பெயரில் முக்கியமான ஊர்களில் மட்டும் நிறுத்தம் கொடுத்து 38 ரூபாய் கட்டணம் வசூலித்து வந்தனர். தற்போது பெண்களுக்கான கட்டணமில்லா "வெற்றிப் பயணம்" திட்டத்தின் கீழ் இந்தப் பேருந்து சேர்க்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி - சாத்தான்குளம் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கிறது.

அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதால் LSS பெயர் நீக்கப்பட்டு, சாதாரண கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் இதற்கு முன்பு வரை திருநெல்வேலிக்கு 38 ரூபாய் கொடுத்து வந்த ஆண்களுக்கு 8 ரூபாய் லாபம்.

அதே சமயம் limited Stop Service என்ற பெயரில் இயக்கும் போது 45 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருநெல்வேலியை 1 மணி நேரம் 10 நிமிடங்களில் சென்றடைந்து விடும். தற்பொழுது அனைத்து ஊர்களிலும் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதால் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் இந்த பேருந்தின் நேரத்தை கணக்கீடு செய்து தங்களுடைய பணிக்கு சென்று வந்தவர்கள் பாதிக்கப்படலாம்.

அனைத்து நிறுத்தங்களிலும் நின்று, பஸ் செல்லும் வேகத்தை பார்த்தால் இன்று 9:30 மணிக்குள் அலுவலகம் சென்று விடலாமா? என்று தெரியவில்லை. இந்தப் பேருந்தில் பயணித்துக் கொண்டு இருக்கும் பொழுது எழுதிய பதிவு இது” என குறிப்பிட்டுள்ளார்.