📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 10, 2026 04:03 AM

ஜலீலின் தொழிலை மாற்றிய கொவிட்

ஜலீலின் தொழிலை மாற்றிய கொவிட்

சிங்கப்பூரில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான தொழிலதிபரும் கொடைவள்ளலுமான எஸ்.முகம்மது அப்துல் ஜலீல், 68, இவ்வட்டாரத்தில் பெரிய அளவில் சொத்து, உள்கட்டமைப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

மலேசியாவில் மருத்துவ நிலையங்களை உருவாக்குவது முதல் ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியிலான உயரடுக்குக் கட்டடங்களைக் கட்டுவது, நியூசிலாந்தில் கரிம ஊக்கப்புள்ளிகளுக்கான வனப்பகுதிகளை அமைப்பது வரை இவரது அண்மைய தொழில்கள் பரந்து, விரிந்து வருகின்றன.

சொத்துகளே இவரது தொழிலில் 75 விழுக்காட்டிற்கும் அதிகப் பங்கு வகிக்கின்றன. ஆனால், ஆரம்பத்தில் நிலவரம் இப்படி இருந்ததில்லை.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையில் திரு ஜலீலுக்கு மட்டும் அது வேறொரு பாதையைக் காட்டியது.

எம்இஎஸ் குழுமம் (ஆரம்பத்தில் மினி என்வைரன்மெண்ட் சர்வீஸ்) என்ற தொழில் மட்டுமே இவரிடம் இருந்தது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளையும் தளவாடப் போக்குவரத்துச் சேவைகளையும் அந்தக் குழுமம் வழங்கி வந்தது.

வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தங்குமிடங்களை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்த எம்இஎஸ் குழுமம், 23,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு வசதியளிக்கும் பல பெரிய அளவிலான தங்குவிடுதிகளை நடத்தி வந்தது.

அதே வேளையில் அதன் போக்குவரத்துப் பிரிவு, குறிப்பாக, கட்டுமானம், இதர தொழில்துறைகளுக்குச் சேவை வழங்கியதோடு தீவு முழுவதும் மூலப்பொருள்கள், கட்டுமான உபகரணங்களைக் கொண்டு செல்வதற்கும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கும் பேரளவில் பயன்படுத்தப்பட்டது.

கொவிட்-19 பல வணிகங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தாலும் திரு ஜலீல் தமது தொழிலை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அதை எடுத்துக்கொண்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

நோய்த்தொற்று பரவியதைத் தொடர்ந்து, 2020 ஏப்ரலில் சிங்கப்பூர் அரசு ‘சர்க்கிட் பிரேக்கர்’ எனப்படும் முடக்கநிலையை நாடு முழுவதும் அமல்படுத்தியது. முக்கிய உள்நாட்டுக் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 2022ல்தான் தளர்த்தப்பட்டன.

இதனை நினைவுகூர்ந்த திரு ஜலீல், “எல்லாமே முடங்கிவிட்டது. உங்களால் முன்னோக்கியும் செல்ல முடியாது, பின்னோக்கியும் நகர முடியாது. அந்தச் சமயத்தில், நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம்,” என்றார்.

“ஏறக்குறைய 22 மாதகாலம் வெற்றிடமாக இருந்த காலத்தில் பல கேள்விகள் எழுந்தன. ஊழியர்களுக்கான தங்குமிடத் தொழிலும் பல சவால்களுடன் சீரமைக்க வேண்டியிருந்ததால் நாங்கள் அதே தொழிலில் தொடரப் போகிறோமா இல்லையா என்பதே தெரியாமல் இருந்தோம்.

“நாங்கள் வெளிநாடுகளில் ஏதாவது செய்யலாம் அல்லது குறைந்தபட்சம் முயற்சியாவது செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். முதலில் மலேசியாவில் மெதுவாக, காலெடுத்து வைத்தோம்.” என்றார் திரு ஜலீல்.

ஆனால் அந்த முடிவு எடுத்த பிறகு அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை.

வெளிநாடுகளில் தொழில் விரிவாக்கம்

கோலாலம்பூரில் உள்ள மெனாரா எம்ஐடிஎஃப் அலுவலகக் கட்டடத்தை ஒரு ஹோட்டலாகவும் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையமாகவும் மாற்றி அவர் தனது தொழிலைப் பன்முகப்படுத்தினார்.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், கேஎல்சிசி, புக்கிட் பிந்தாங் போன்ற நகரத்தின் முக்கிய இடங்களை எளிதில் சென்றடையும் வகையில் அமைந்துள்ள 299 அறைகள் கொண்ட ‘யோட்டெல்’ ஹோட்டல் டிசம்பர் 2026க்குள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒட்டியுள்ள 60 படுக்கைகளுடன் ஏழு தளங்களைக் கொண்ட சிறப்புச் சிகிச்சை மருத்துவ நிலையம் 2027 ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்புத் துறையிலேயே இவரது குழுமம் முக்கியக் கவனம் செலுத்தி வருகிறது. மூப்படையும் மக்கள்தொகையும் குறைவான கட்டணங்களும் மலேசியாவில் இத்துறைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக இவர் நம்புகிறார். சிங்கப்பூரின் அண்டை நாடான மலேசியாவில் மேலும் மூன்று மருத்துவமனைகளைத் திறக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில், இவரது குழுமம் ஹோட்டல்களையும் வாங்கியுள்ளது. 2025 செப்டம்பரில் பிரிஸ்பேனில் அது ஒரு ஹோட்டலை வாங்கியது. இதையடுத்து ஜூன் 2026ல் பெர்த், மெல்பர்ன் நகரங்களிலும் இரண்டு ஹோட்டல்களையும் அது வாங்கியது.

பெர்த் நகரில் 98 அறைகள் கொண்ட ‘பென்சியோன் ஹோட்டல்’, மெல்பர்னில் 216 அறைகள் கொண்ட ‘ஹோட்டல் இண்டிகோ ஆன் ஃபிளிண்டெர்ஸ்’, பிரிஸ்பேனில் ‘ஜார்ஜ் ஹோட்டல் பிரிஸ்பேன்’ ஆகியவை அவை.

ஏற்கெனவே சிங்கப்பூர், ஜப்பான், மாலத்தீவில் உள்ள திரு ஜலீலின் தற்போதைய ஹோட்டல் சொத்துகளின் பட்டியலில் அவை இணையவுள்ளன.

இக்குழுமத்தின் வெளிநாட்டுச் சொத்துகளில், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள ஹாக்ஸ் பேயில் அமைந்துள்ள 481 ஹெக்டர் நிலமும் அடங்கும். கரிம ஊக்கப்புள்ளிகளை உருவாக்குவதற்காக அந்த நிலம் ரேடியேட்டா பைன், ரெட்வுட் மரங்களைக் கொண்ட பெரிய அளவிலான வணிகப் பெருந்தோட்டக் காடாக மாற்றப்பட்டு வருகிறது.

நிலத்தை வணிகக் காடாக மாற்றும்போது, அங்கு வளரும் மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கரிமத்தை ஆண்டுதோறும் பேரளவில் உறிஞ்சுகின்றன. இதனால் நியூசிலாந்தின் கரிம வர்த்தகத் திட்டத்தின்கீழ், இக்குழுமம் அந்நாட்டின் அதிகாரபூர்வக் கரிம ஊக்கப்புள்ளிகளை பெற முடியும்.

மரங்களை அறுவடை செய்வதற்கு முன்பே வருவாய் ஈட்டும் வகையில் இக்குழுமம் அந்த ஊக்கப்புள்ளிகளை மதிப்புமிக்கச் சொத்தாக சேமித்து வைக்கலாம் அல்லது சந்தையில் அதிக கரிமத்தை வெளியேற்றும் நிறுவனங்களுக்கு விற்கலாம்.

புதிய தொழில்முனைவோருக்கு அறிவுரை

எளிய பின்னணியிலிருந்து முன்னேறி வந்துள்ள திரு ஜலீல், தொழிலைத் தொடங்கியவுடனேயே லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று இளம் தொழில்முனைவோருக்கு அறிவுறுத்துகிறார்.

“முதலில் உங்கள் பணத்தைச் செலவழித்துப் பழக வேண்டும். அப்போதுதான் அந்த இழப்பை உங்களால் உணர முடியும். அதற்குப் பிறகு நீங்கள் சம்பாதிக்கும்போது, மீண்டும் கூடுதல் பணத்தை எவ்வாறு ஈட்டுவது என்பது உங்களுக்குப் புரியும். நீங்கள் உடனடியாகப் பணம் சம்பாதித்துவிட்டால், அது உங்களுக்கு ஆபத்து, ஏனெனில் அதை நீங்கள் மிக வேகமாக விரயம் செய்துவிடுவீர்கள்,” என்று இவர் கூறினார்.

குறைந்த போட்டியும் ஆபத்தும் கொண்ட சந்தைகளைத் தேடுமாறு இவர் பரிந்துரைக்கிறார்.

“உங்களுக்கான சந்தை வாய்ப்புகளைக் கண்டறியுங்கள். நான், சிங்கப்பூரைவிட்டு வெளியே சென்றால், எனக்குச் சிறந்த லாபம் தரக்கூடிய பல துறைகள் இருக்கின்றன. ஆனால் அங்கு அதிக அபாயமும் உள்ளது. என்னைப் பொறுத்தவரை எனக்குக் குறைந்த அளவிலான அபாயமே இருக்க வேண்டும், அதே வேளையில் தொழிலின் நிலைத்தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும்,” என்று இவர் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்கு உதவுவதே முதன்மைத் தத்துவம்

திரு ஜலீல் தனது அறப்பணிகளையும் தொழிலையும் தனித்தனியாகவே வைத்துள்ளார்.

“நான் இந்த அளவுக்கு உயர்வதற்குச் சமுதாயமும் நாடுமே காரணம். சிங்கப்பூர்தான் என்னை உருவாக்கியது. எனவே, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மீண்டும் திருப்பிக் கொடுப்பது எனது, எங்களது, எனது பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகளின் கடமையாகும்.

“நீங்கள் எங்கிருந்து தொடங்கினீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, நீங்கள் வசதியாக இருக்கும்போது, பிறருக்குக் கொடுக்கக் கூடுதல் பணம் இருக்கிறது என்று நினைத்தால் கொடுத்துவிடுங்கள். அதுவே வாழ்க்கைத் தத்துவமாக இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

எஸ்.எம்.ஜலீல் அறநிறுவனம், சிங்கப்பூர் இந்தியர்கள், தமிழ்மொழி, பாரம்பரியத் திட்டங்கள் (வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் இலக்கியங்களை மின்னிலக்க வடிவில் மாற்றுவது) போன்றவற்றுக்கு முதன்மை நன்கொடையாளராகத் திகழ்வதுடன், வட்டார அளவிலான பேரிடர், மனிதநேய நிவாரண முயற்சிகளுக்கும் உதவி வருகிறது.

இதர அறப்பணிகளுடன் இந்த அறக்கட்டளை, உயர்கல்வி மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதியை வழங்கி வருகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி மாணவர்களுக்கான கைக்காசு நிதிக்கு மிக அதிக நன்கொடை வழங்கும் அமைப்புகளில் இந்த அறநிறுவனமும் ஒன்று.

இவை போக, புற்றுநோய் சிகிச்சை பெறும் குழந்தைகள் தங்களது கல்வியை விட்டுவிடாமல் இருப்பதற்காக குழந்தைகள் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதியுதவியையும் எஸ்.எம்.ஜலீல் அறநிறுவனம் வழங்கி வருகிறது.

செய்தி: தப்லா! செய்தியாளர் அப்துல் ஹாதி, தமிழாக்கம்: கு.காமராஜ்