பாகிஸ்தான் வீரர்களின் செல்போனை பிடுங்கிய நிர்வாகம்.. 3வது டெஸ்ட்க்கு முன்பு பாக். வாரியம் அதிரடி
பாகிஸ்தான் வீரர்களின் செல்போனை பிடுங்கிய நிர்வாகம்.. 3வது டெஸ்ட்க்கு முன்பு பாக். வாரியம் அதிரடி
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, தங்களது வீரர்கள் சிலரின் மொபைல் போன்களை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கைப்பற்றி' வைத்துள்ளதாக அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் வாரியம் நடத்தும் விசாரணையில் ஒரு பகுதி என கூறப்படுகிறது. ஆனால் அது எதற்கான விசாரணை என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் ஐசிசி ஆகியவற்றிற்கு வீரர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால், அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே இது சாத்தியம். குறிப்பாக ஊழல் தடுப்பு விசாரணைகளின் போது மட்டுமே இவ்வாறு செய்யப்படும். இருப்பினும், தற்போது வீரர்களுக்கு எதிராக எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டுகளோ அல்லது அது தொடர்பான விசாரணைகளோ நடைபெறுவதாக நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.
ஐசிசி விதிமுறைகளின்படி நடத்தப்படும் இந்த விசாரணைகளில், மொபைல் டேட்டாவை மீட்டெடுப்பது, நீக்கப்பட்ட செய்திகளை ஆராய்வது அல்லது Bookies உடன் ரகசிய தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்று சோதிப்பது போன்றவை அடங்கும். இந்த விசாரணைப் பிரிவு ஒரு வீரரை அவரது மொபைல் போனை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றாலும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பது ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது.
இது தவிர, போட்டி நாட்களில் வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் கொள்ளக் கூடாது என்பதற்காக, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த வீரர்களுக்கு கடுமையான தடை விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட டிரஸ்ஸிங் ரூம் அல்லது டக்அவுட்களுக்குள் நுழைவதற்கு முன்பு, அனைத்து வீரர்களும் பயிற்சியாளர்களும் தங்களது தனிப்பட்ட போன்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை ஒப்படைக்க வேண்டும். அவசர தேவை அல்லது நிர்வாக காரணங்களுக்காக, அணியின் மருத்துவர் அல்லது மேலாளர் போன்ற ஒரு சில நியமிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே போன் வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது.
எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணி தனது டெஸ்ட் அணியில் பெரும் அதிரடி மாற்றங்களைச் செய்தது. இங்கிலாந்தில் இருந்து ஏழு வீரர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பியதோடு, அவர்களுக்குப் பதிலாக ஏழு புதிய வீரர்களை அணியில் சேர்த்துள்ளது.
இமாம்-உல்-ஹக், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அலி உஸ்மான், குர்ரம் ஷாசாத், அமீர் ஜமால் மற்றும் முகமது உவைஸ் ஜாபர் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் ஏற்கனவே தாயகம் திரும்பிவிட்டனர். சயீம் அயூப் மற்றும் அப்துல்லா ஃபசல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத அராஃபத் மின்ஹாஸ், முகமது இம்ரான் ஜூனியர், சாத் பைக், முகமது இம்ரான் ரந்தாவா மற்றும் ரசாவுல்லா ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி சந்தித்த படுதோல்விகளைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. லீட்ஸ் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் போட்டியில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளின் நான்கு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தான் அணியால் 200 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை.