📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 05, 2026 08:03 PM

“ஈரான், அமெரிக்கா இடையே நடப்பது போர் அல்ல... ராணுவ மோதல் மட்டுமே”

“ஈரான், அமெரிக்கா இடையே நடப்பது போர் அல்ல... ராணுவ மோதல் மட்டுமே”

வாஷிங்டன் டிசி: அமெரிக்கா - ஈரான் இடையே நடப்பது போர் அல்ல என்றும், அது அவ்வப்போது நிகழும் ராணுவ மோதல் மட்டுமே என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்கா - ஈரான் இடையே நடப்பதை போர் என்று பலரும் சொல்வதில்லை. நான் இதை ராணுவ மோதல் என்றே குறிப்பிடுகிறேன். இது எங்களுக்கு மிகச் சிறிய விஷயம். இது எங்களுக்கு பெரிய விஷயமே அல்ல.

இந்த மோதலில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், வியட்நாம் மற்றும் ஆப்கனிஸ்தானுடன் அமெரிக்கா நடத்திய போருடன் இதனை ஒப்பிட முடியாது. இது அவ்வப்போது நிகழும் ராணுவ மோதல் மட்டுமே. நாங்கள் அவ்வப்போது தாக்குதலை தொடுக்கிறோம். அணு ஆயுதத்தை ஈரான் கொண்டிருக்காது. நாங்கள் அதை தடுத்துவிட்டோம்.

ஈரானின் பிக்காக்ஸ் பகுதியில் (யுரேனியம் செறிவூட்டும் பகுதி) நடவடிக்கை எதுவும் இருப்பின் அதன் மீது நாங்கள் உடனடியாக தாக்குதலை நடத்துவோம். ஈரான் முழுவதையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஏதாவது தவறாக நடந்தால் நாங்கள் நிச்சயம் தாக்குவோம். எங்கள் தாக்குதல் கடுமையானதாக இருக்கும்.

ஹார்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கான ஈரானின் ரேடார், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் அழித்துவிட்டோம். அங்கு இருந்த கண்ணிவெடிகளை, அமெரிக்காவின் கண்ணிவெடிகள் அகற்றும் கப்பல்கள் அகற்றிவிட்டன. ஹார்மூஸ் ஜலசந்தி இப்போது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

நாங்கள் வெனிசுலாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். அதேபோல், ஈரானையும் எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம். கடைசியாக நாங்கள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு கடந்த சில நாட்களாக எந்த துப்பாக்கிச்சூடும் அங்கு நடைபெறவில்லை. நாங்கள் எங்கள் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தினால்கூட ஈரான் மீண்டெழ 25 ஆண்டுகள் ஆகும்.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் இந்த விவகாரம் குறித்து கவலைப்படாத வகையில் நான் இதை முடிக்க விரும்புகிறேன்.

ஈரான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன். அவர்களும் இதில் பெரிதாக தலையிடவில்லை. சீனாவின் தலையீடு என்பது சிறிய அளவில் மட்டுமே உள்ளது” என தெரிவித்தார்.

இதனிடையே, “அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கிறது. எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள ஈரான் ராணுவம் தயாராக உள்ளது. எங்களது ஆயுதங்கள் எதிரிகளை துவம்சம் செய்யும்” என்று ஈரான் ராணுவ மூத்த தளபதி அலிரேசா எல்ஹாமி கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.