நகைச்சுவை மூலம் சமூகப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய மாயா கிருஷ்ணன்
ஆணாதிக்கம், பாலினச் சமத்துவமின்மை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் எனச் சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை நகைச்சுவை வழியாகச் சுட்டிக்காட்டினார் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான மாயா எஸ்.கிருஷ்ணன்.
அவரது ‘பொம்பளேள்’ (Pomblel) எனும் 18 வயதை எட்டியோருக்கான நிகழ்ச்சி, செப்டம்பர் 25ஆம் தேதி ‘சிங்கப்பூர் ரெப்பர்ட்டரி அரங்கில்’ நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ‘மிஸ் மஞ்சுளா’ எனும் ஆசிரியராக உருமாறிய மாயா கிருஷ்ணன், நகைச்சுவை வழியாகச் சமூகப் பிரச்சினைகளைப் பார்வையாளர்களிடம் எடுத்துரைத்தார்.
‘விக்ரம்’, ‘2.0’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மாயா கிருஷ்ணன், பின்னர் ‘பிக் பாஸ் தமிழ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து, இணையத்தில் ‘மிஸ் மஞ்சுளா’ எனும் கதாபாத்திரத்தை உருவாக்கி, அதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
‘யூடியூப்’ தளத்தில் தொடங்கிய மாயாவின் பயணம், அவரது முதல் தனிமனிதர் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தியாவில், சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் அந்நிகழ்ச்சியைப் நடத்திய அவர், சிங்கப்பூரிலும் ‘பொம்பளேள்’ நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.
“நகைச்சுவை என்பது கருத்துகளை எடுத்துரைப்பதற்கான மிகப் பெரிய கருவி. இந்த நிகழ்ச்சி ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒரு போராட்டம். ஆனால், இது ஆண்களுக்கு எதிரானது அன்று. இந்தியாவில் இன்றும் நிலைமை பெரிதாக மாறவில்லை. நகைச்சுவை வழியாக எனது கருத்துகளை முன்வைப்பதால், அவை மக்களிடம் இன்னும் வலுவாகச் சென்றடைகின்றன,” என்று மாயா கிருஷ்ணன் தமிழ் முரசிடம் கூறினார்.
“சிங்கப்பூர் மக்களுக்கு அர்த்தமுள்ள கருத்துகளை முன்வைக்கும் ஒரு நிகழ்ச்சியைக் கொண்டுவர எண்ணினேன். பார்வையாளர்கள் சிரிப்பதோடு நின்றுவிடாமல் சிந்திக்கவும் வேண்டும். சிங்கப்பூர் நவீனமயமாகியிருந்தாலும் இந்தியச் சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை,” என்றார் ‘பாப்கார்ன்’ எனும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனர் மஞ்சுளா பாலகிருஷ்ணன். சிங்கப்பூருக்குப் ‘பொம்பளேள்’ நிகழ்ச்சியைக் கொண்டுவந்ததோடு, அதன் தயாரிப்புப் பணிகளிலும் ‘பாப்கார்ன்’ நிறுவனம் ஈடுபட்டது.