உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வெடிகுண்டு பரபரப்பு: ஒருவர் கைது
ஜோகூரிலிருந்து உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடிக்குள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) ஐந்து நபர்களுடன் வந்த 38 வயது சிங்கப்பூர் ஓட்டுநரை மேம்பட்ட சோதனைப் பகுதிக்குச் செல்லும்படி பணியில் இருந்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
அங்கு அதிகாரிகள் சோதனைகளை முடித்ததும் அந்த ஓட்டுநர் அவர்களை நோக்கி “வெடிகுண்டு எதையும் கண்டெடுக்க முடியவில்லையா” என்று பொருள்படும் விதத்தில் கேலியாகப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த குடிநுழைவுச் சோதனைச் சாவடி அதிகாரிகள் (ஐசிஏ) உடனடியாக அந்தப் பகுதியை தனிமைப்படுத்தி, கூடுதல் அதிகாரிகளை வரவழைத்து வாகனத்தில் சோதனைகளைத் தீவிரப்படுத்தினர்.
வாகனம், ஓட்டுநர் உட்பட அதில் இருந்த ஐவரையும் மீண்டும் அதிகாரிகள் சோதித்தனர்.
வெடிகுண்டு எதையும் அதிகாரிகள் கண்டெடுக்கவில்லை. இதன் விவரங்களை ஐசிஏ செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) அதன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டது.
சம்பவம் நடந்த தினத்தன்று மாலை 6.20 மணிக்கு ஆடவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். தொல்லைப்படுத்துதலில் இருந்து பாதுகாக்கும் சட்டப்படி, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முறையற்ற தகவல்களை வழங்கிய குற்றத்துக்கு அவர் விசாரிக்கப்படுகிறார்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது. எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் முறையாகவும் அதிகாரிகளின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் விதத்திலும் நடந்துகொள்ளுமாறு அனைத்து பயணிகளுக்கும் ஐசிஏ நினைவூட்டியது.
பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் அனைத்து புகார்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்ற ஐசிஏ, தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் பொய்யான திசைதிருப்பும் செய்திகளைப் பகிர்வோர்மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்படாது எனவும் அது எச்சரித்தது.