முதல்வர் பஞ்ச் டயலாக் பேசுகிறார்; சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: உதயநிதி குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள். படம்: ம.பிரபு
சென்னை: ‘முக்கிய கேள்விகளுக்கு பதில் தராமல் பஞ்ச் டயலாக் மற்றும் சினிமா வசனங்களை முதல்வர் பேசியுள்ளார். பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அளித்த பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவையில் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது. கடந்த 3-ம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பதை ஆதாரத்தோடு பேசியிருந்தேன். 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். முதல்வர் திசை திருப்பாமல் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தரவேண்டும் என்றும் கூறியிருந்தேன்.
ஆனால், முதல்வர் தனது பதிலுரையில் எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மேல் வைக்க ஆரம்பித்தார். நானும், எங்கள் உறுப்பினர்களும் எழுந்து, ‘முதல்வர் வெளியில் பேசுவதை இங்கே பேசுகிறார். அதுக்கு பதில் கூறவேண்டும், நீங்கள் வாய்ப்பு கொடுங்கள்’ என்று பேரவைத் தலைவரிடம் கேட்டோம். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
முதலில், எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறினார், பின்னர் மறுத்து விட்டார். எனவே, நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க, வெளிநடப்பு செய்துள்ளோம்.
‘டைவர்ஷன் டாக்டிக்ஸ்’
ஆனால், அதற்கு மாறாக, திமுக ஆட்சியில் இவ்வளவு வழக்குகள் இருக்கின்றன என்று எங்கள் மீது திருப்புகிறார். அதுவும், 1970-க்கே முதல்வர் சென்றுவிட்டார். சர்க்காரியா கமிஷன், மிசா பற்றி பேசுகிறார். மிசா பற்றி பேசுவதற்கு இவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா?
முதல்வர் மீது வருமானவரி வழக்கு இருக்கிறது. இங்குஇருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. இந்த அரசு மீது இப்போது வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டு வைக்கிறேன். முதல்வரின் நண்பர்கள், அவருடைய அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவருடைய உறவினர் சுஜய் ரெட்டி, அவருடைய வணிக பங்குதாரர் அனில் ரெட்டி ஆகியோர் சேர்ந்து இப்போது சுரங்கத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். அரசு நடத்தும் சுரங்கத் தொழிலை இவர்களே இப்போது முழு கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன். மேலும், ஒருதலைபட்சமாக செயல்படும் பேரவைத் தலைவருக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.