மீண்டும் விவாதப்பொருளான குதிரை பேர விவகாரம்
மீண்டும் விவாதப்பொருளான குதிரை பேர விவகாரம் - ஐயூஎம்எல் எம்எல்ஏவின் பேச்சும், வெடித்த சர்ச்சையும்
"பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்தோம். திமுக ஒரு நிலைப்பாடு எடுத்தபோது, அதை நாங்கள் ஏற்க மறுத்தோம்" என்று அமைச்சர் ஷாஜகான் கூறினார்.
Published : September 7, 2026 at 7:00 PM IST
-By எஸ்.சிவக்குமார்அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறி, கோடி கோடியாக பணத்துடன் வந்தார்கள் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ சையது பாரூக் பாஷா பேசியதில் இருந்து, தமிழ்நாட்டில் குதிரை பேரக் குற்றச்சாட்டு மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, திமுக கூட்டணியில் இருந்த தேர்தலை சந்தித்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி செய்து வருகிறது. தவெக அரசு அமைந்ததில் இருந்தே அதன் மீது வைக்கப்படும் மிகவும் பிரதான குற்றச்சாட்டு, குதிரை பேரம். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தொடங்கி, திமுக வரை தொடர்ச்சியாக தவெக அரசு மீது குதிரை பேர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்கு வித்திட்ட பேச்சு
இந்த சூழலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஐ.யூ.எம்.எல் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் எம்எல்ஏ சையது பாரூக் பாஷா பேசும்போது, தன்னையும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானையும் தேடி சிலர் கோடி கோடியாக பணத்துடன் வந்து ஆதரவு கேட்டனர் என்றார்.
தாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல; கொள்கையைச் சார்ந்தவர்கள் எனக் கூறி அவர்களை விரட்டி அடித்ததாகவும் அவர் தெரிவித்தார். இவரது பேச்சால் தமிழக வெற்றி கழகம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சட்டமன்ற உறுப்பினர் சையது பாரூக் பாஷாவின் பேச்சுக்கு விளக்கம் அளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.எம்.முஹமது அபூபக்கர், "தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு நிலையான ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக, பல்வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முயன்றதால்தான் குதிரை பேரம் நடைபெற்றதாக சையது பாரூக் பாஷா கூறினார். அவர் எந்த கட்சியையும் சுட்டிக் காட்டவில்லை" என்றார்.
ஆனால், எதிர்க் கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும், எதிர்க் கட்சியினர் தரம் தாழ்ந்த விமர்சனம் செய்வதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்த சையது பாரூக் பாஷா
இந்த சூழலில், இன்று நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தொடரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சையத் பாரூக் பாஷா தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து பேசினார்.
அப்போது, "நான் தவறாகப் பேசியதாகச் சித்தரித்து வீடியோவை வெளியிடுகிறார்கள். நான் தவறாகப் பேசவில்லை. எங்கள் தலைவர் கூறியதையே பொதுக்குழுவில் குறிப்பிட்டேன். கட்சி என்று இருந்தால் ஒரு கொள்கை இருக்கும். நாங்கள் எந்தக் கோடிக்கும் விலை போக மாட்டோம். அதனால், அந்த கூட்டணியை நாங்கள் ஆதரிக்காமல் கொள்கைக் கூட்டணியாகத் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்கிறோம் என்று கூறினோம்.ஆனால், ஐ.யூ.எம்.எல். எம்எல்ஏக்கள் கோடி கோடியாகப் பணம் வாங்கிக்கொண்டு தவெகவிற்கு ஆதரவளித்ததாகச் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். நாங்கள் எந்தப் பணமும் வாங்கவில்லை; கொள்கைக்காக மட்டுமே தவெகவுடன் இணைந்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக தலைவர்களை முதலமைச்சராகக் கொண்டுவர வேண்டும் கூறியதால் நாங்கள் ஏற்கவில்லை" என்றார்.
மேலும் இதுகுறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானும் சட்டப் பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சையது பாரூக் பாஷா அதிமுக உறுப்பினர்களைப் பற்றிப் பேசவில்லை; கட்சிக் கூட்டத்தில் பேசியதைச் சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆட்சி லஞ்சம் இல்லாமல் நேர்மையாக நடைபெற்று வருகிறது. மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் வந்துவிடக் கூடாது என்று நினைத்தோம். திமுக ஒரு நிலைப்பாடு எடுத்தபோது, அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தது; அதை நாங்கள் ஏற்க மறுத்தோம்.
அதன் பிறகு, ஐ.யூ.எம்.எல். கட்சியின் இரண்டு உறுப்பினர்களை நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்தது யார்? காவலில் வைத்தது யார்? என்ற ரகசியத்தை எங்களால் வெளியே சொல்ல முடியும். எங்களைப் பொறுத்தவரை பாஜக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெகவிற்கு ஆதரவளித்தோம். மானியக் கோரிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறோம். அதைச் செயல்படுத்தினால் இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் எதிர்க்கட்சிகள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன" என்றார்.
குதிரை பேரம் நடத்தியது திமுகதான்- ஆதவ் அர்ஜுனா
தொடர்ச்சியாக இதுகுறித்து பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இஸ்லாமிய சகோதரர்கள் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர்கள் பேசியதைத் திரித்து, தவெக மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள். வெற்றி கிடைத்தவுடன் மக்கள் தீர்ப்பிற்குத் தலைவணங்கி காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் உள்ளது.
எந்த சட்டமன்ற உறுப்பினரிடமும் தவெக பொதுச்செயலாளரோ, நானோ, எப்போதும் பேசவில்லை. இந்த அரசு, ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி, ஜனநாயக பார்வையுடனே ஆட்சி அமைத்துள்ளது.
குதிரை பேரம் நடத்தியது யார்? ஐ.யூ.எம்.எல். கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை நட்சத்திர விடுதியில் தங்க வைத்தது யார்?
அந்த ஹோட்டலின் உரிமையாளர், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன். எனவே, ஐ.யூ.எம்.எல். கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை நட்சத்திர விடுதியில் தங்க வைத்தது யார் என்பது குறித்து விரைவில் விசாரனை நடத்தப்படும். அதன் பிறகு குதிரை பேரும் நடத்தியது யார் என்று மக்களுக்கு தெரிவிப்போம். திமுகதான் குதிரைப் பேரம் நடத்தியது" என்றார்.
இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், "கடந்த இரண்டு நாட்களாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை திமுக சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது. இது அவர்களைப் போலக் கோடிகளைக் கொட்டி அமைந்த அரசு அல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து அமைந்த 'விஜய் சர்க்கார்'" என்றார்.
அதிமுகவுக்கு களங்கம் சுமத்த முயற்சி- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
இதுகுறித்து அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்து பேசுகையில், "இங்கே உறுப்பினர் பேசும்போது 'அதிமுக' என்ற பெயரைப் பயன்படுத்தினார். அதிமுக யாருடைய தயவிலும் இயங்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட இயக்கம் இது. தற்போது எடப்பாடி பழனிசாமி இக்கட்சியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இத்தகைய இயக்கத்தைச் சிலர் களங்கப்படுத்த முயல்வதை நாங்கள் ஏற்க முடியாது.
தனிப்பட்ட முறையில் 47 இடங்களை அதிமுக பெற்றுள்ளது. திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க இருந்ததாக அடிக்கடி பேசப்படுகிறது. அதுபோன்ற எந்த முயற்சியும் நடக்கவில்லை. மக்கள் எங்களை எதிர்க்கட்சியாக அமர்த்தியுள்ளனர். திமுகவுடன் நாங்கள் எந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதை எங்கள் தலைவரும் தெளிவுபடுத்தியுள்ளார்.
திமுக ஒரு தீய சக்தி என்று சொன்னவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். அதே வழியில் அதிமுகவை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி. எங்கள் இயக்கத்தைப் பற்றி யார் குறை சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை கண்டிக்கின்றோம்" என்று கூறியுள்ளார்.
குதிரை பேரம் நடைபெற்றதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுதொடர்பான விசாரணை நடத்தினால் முழு உண்மை தெரியவரும்.