ஐயுஎம்எல்லிடம் தவெக குதிரை பேரம் நடத்தியதா? எம்எல்ஏக்கள் விளக்கம்
ஐயுஎம்எல்லிடம் தவெக குதிரை பேரம் நடத்தியதா? எம்எல்ஏக்கள் விளக்கம்
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தங்களை தேடி வந்து கோடிக்கணக்கில் பணமும், விரும்பிய அமைச்சர் பதவியும் தருவதாக கூறி பேரம் பேசப்பட்டதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) எம்எல்ஏ சையது பாருக் பாஷா நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று பேசிய சையது பாரூக் (ஐயுஎம்எல்), ‘‘திமுக, அதிமுக இணைந்து கூட்டணி அமைத்து அதிமுகவில் ஒருவரை முதல்வராக ஆக்க முயற்சி நடந்தது என்று சொன்னேன். பாஜ கூட்டணியில் அதிமுக இருக்கும்போது எப்படி அதிமுகவை முதல்வராக ஏற்க முடியும் என்றுதான் கட்சி தலைவர் கூறினார். ஆனால், நான் பேசியதை திரித்து வெளியிட்டு வருகிறார்கள்’’ என்றார்.
ஐயுஎம்எல் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஷாஜகான்: 2026ம் ஆண்டு புதிய ஆட்சி மலர்ந்த பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய அதிர்வலைகளை பொதுமக்கள் கண்டு வந்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பாரூக் பாஷா திருவண்ணாமலையில் நடந்த கட்சி பொதுக்குழுவில் பேசியதை திரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி அமைந்த பிறகு ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி என்ற பெயரில் இந்த ஆட்சி சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை மீறி பணம் வாங்குகிறார்கள், பேரம் பேசுகிறார்கள் என்கிறார்கள். தொடர்ச்சியாக, சோபா மாடல் என்றும் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேசுவதை பிரித்து பேசுவதாலும் சில விளக்கங்களை கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. தேர்தல் முடிவு வந்த பிறகு மே 4ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர்கள் பக்கம் நின்று முடிவெடுப்பதாக அறிவித்திருந்தாலும் மே 9ம் தேதி ஒன்றிய அரசினுடைய கைப்பாவையாக ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் எங்கள் ஆதரவை தவெகவுக்கு அளித்தோம்.
இருப்பினும், அவர் சொல்ல வந்த குற்றச்சாட்டு மே 7ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை தொடர்பு கொண்டவர்கள் யாரை முதல்வராக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் என்பதை பாரூக் எம்எல்ஏ குறிப்பிட்டு சொல்லியுள்ளார். சில விஷயங்களை ஓப்பனாக சொல்ல விரும்பவில்லை. மே 8ம் தேதி இரவு 10 மணிக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு ஓட்டலில் கொண்டு போய் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யாரு? எங்களுக்கு காவல் போட்டது யாரு? என்று எல்லாம் உடைத்து சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடும். அதில் பல நிகழ்வுகள் நடந்தது. எங்களை பொறுத்தவரை ஒன்றிய அரசினுடைய ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்கிற அடிப்படையில் முதல்வர் விஜய்க்கு இந்த ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க நாங்கள் காரணமாக இருந்தோம்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ஐயுஎம்எல் கட்சியை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களை ஓட்டலில் யார் தங்க வைத்தார்கள்? அந்த ஓட்டல் உரிமையாளர் யார்? அவர்களை அங்கே தங்க வைத்தவர்கள் யார் என்று கூடிய விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.