📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 16, 2026 07:34 PM

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: "வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்"

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: "வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்"

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: "வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்" - உயர் நீதிமன்றம்

ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ``கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்வான ஆறு எம்.எல்.ஏ.க்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க கட்சியில் இணைந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்திலேயே அரசியல் காரணங்களுக்காக பதவி விலகியதால், மக்கள் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

எனவே, இந்தத் தேர்தல் செலவுகளை அந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடமே டெபாசிட்டாகப் பெறவும், அவர்கள் மீண்டும் போட்டியிடத் தடை விதிக்கவும் வேண்டும். மேலும், வழக்கு முடியும் வரை இடைத்தேர்தலுக்கும், த.வெ.க வேட்பாளர்களான மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்புமனு ஏற்புக்கும் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ``மதுராந்தகம் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது கடும் அதிருப்தியளிக்கிறது.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது ஒரு கேலிக்கூத்தான செயலாகும். ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல். ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் போட்டியிடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருப்பினும், சட்ட நடைமுறைகளின்படி மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க வழி இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் தேர்தல் ஆணையம் உரிய வழிமுறைகளை வகுக்க ஆய்வு செய்ய வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.