📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 16, 2026 07:35 PM

தென்கிழக்காசியப் பொருளியல் வளர்ச்சி: டிபிஎஸ் அறிக்கை

தென்கிழக்காசியப் பொருளியல் வளர்ச்சி: டிபிஎஸ் அறிக்கை

உலக அளவில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு நடுவிலும் தென்கிழக்காசியாவின் ஆறு பெரிய பொருளியல் நாடுகள் 2035 வரையிலான பத்தாண்டுகளில் ஆண்டிற்குச் சராசரியாக 4.8 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று புதிய அறிக்கை ஒன்று கணித்துள்ளது.

டிபிஎஸ் வங்கி, பெயின் அண்ட் கம்பனி, வ்ரியன்ஸ் அண்ட் பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 16) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, வியட்னாம் 6.2 விழுக்காட்டு வளர்ச்சியுடன் முதலிடம் வகிக்கும் என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிலிப்பீன்ஸ் 5.8 விழுக்காடும் இந்தோனீசியா 5.4 விழுக்காடும் மலேசியா 4.3 விழுக்காடும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர், ஆண்டிற்குச் சராசரியாக 2.7 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் வளர்ச்சி 2.2 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் வளர்ச்சி விகிதம் பிற வட்டார நாடுகளை விடக் குறைவாக இருந்தாலும் ஆசியானிலேயே ஆக அதிகத் தனிநபர் வருமானம் கொண்ட நாடாகச் சிங்கப்பூர் திகழ்கிறது. நாட்டின் மக்கள்தொகை விரைவாக முதுமையடையும் சவால்களுக்கு நடுவிலும், 2.5 விழுக்காட்டிற்கும் மேல் வளர்ச்சி அடைவது மிகவும் சிறப்புக்குரியது என்று டிபிஎஸ் வங்கியின் தலைமைப் பொருளியல் வல்லுநர் தைமூர் பெய்க் தெரிவித்தார்.

சிங்கப்பூர் 2024லும் 2025லும் சராசரியாக 5.2 விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பதிவு செய்தது.

செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான பகுதி மின்கடத்தித் தேவையும் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதியும் வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.

அதேவேளையில், கட்டமைப்புச் சவால்களால் இந்தோனீசியாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பொதுத்துறை முதலீடுகள் குறைந்ததால் பிலிப்பீன்ஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அறிக்கையின் வெளியீட்டைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பேசிய வர்த்தக, தொழில்துறை (எரிசக்தி, தொழில்துறை) அமைச்சர் டான் சீ லெங், வட்டாரம் முழுவதும் செழிப்படையும்போது சிங்கப்பூரும் வளர்ச்சி அடையும் என்றார்.

தென்கிழக்காசியாவிற்கு வரும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகையைச் சிங்கப்பூர் ஈர்த்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.