📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 26, 2026 11:03 AM

மதுராந்தகம் `பிகில்’... தாராபுரம் `திகில்’... முதல்வர் கையில் உளவுத்துறை ரிப்போர்ட்!

மதுராந்தகம் `பிகில்’... தாராபுரம் `திகில்’... முதல்வர் கையில் உளவுத்துறை ரிப்போர்ட்!

மதுராந்தகம் `பிகில்’... தாராபுரம் `திகில்’... முதல்வர் கையில் உளவுத்துறை ரிப்போர்ட்!

“தாராபுரத்தில் த.வெ.க இறங்கு முகமாகிப் போயிருப்பதற்கு, உள்ளடி வேலை மட்டும் காரணமல்ல, அந்தத் தொகுதியில் அ.தி.மு.க பலமாக இருப்பதே” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் உச்சகட்ட சூட்டைத் தொட்டிருக்கும் நிலையில், கோட்டையே வெறிச்சோடிப்போயிருக்கிறது. ஒட்டுமொத்த அமைச்சரவையையும் இரண்டாகப் பிரிந்து, மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் முகாமிட்டிருக்கும் நிலையில், உளவுத்துறை அளித்திருக்கும் ‘ஷாக்’ ரிப்போர்ட்டால் அதிர்ந்துபோயிருக்கிறார் முதல்வர் விஜய். ‘மதுராந்தகம்கூட ஓகே. அங்கே விசில் ஊதிவிடுவோம். ஆனால், தாராபுரத்தில் வெற்றி டவுட்தான்...’ என்று அதிர்ச்சியளித்திருக்கிறது அந்த ரிப்போர்ட்.

“இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்றால், முதல்வரின் இமேஜ் என்னாவது... ஆட்சியின் மீது அவநம்பிக்கை வந்துவிடாதா?” என்று பதற்றத்தில் இருக்கிறார்கள் த.வெ.க சீனியர்கள். உளவுத்துறை ரிப்போர்ட்டைத் தொடர்ந்து, சமூகரீதியாக வாக்குகளைப் பிரித்து வேட்டையாடுவதற்கான வியூகங்கள் வேகமெடுத் திருக்கின்றன. இதற்கிடையே, “வேட்பாளர்கள் எங்களை வந்து சந்திக்கவில்லை...” எனக் கூட்டணிக் கட்சிகளெல்லாம் கொதிப்பதும், ஆளும் தரப்பை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.

“தேர்தலுக்கு இன்னும் பத்து நாள்கள்கூட இல்லாத நிலையில், த.வெ.க-வின் கடைசி நேர வியூகங்கள் செல்லுபடியாகுமா... உளவுத்துறையின் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?” எனக் களமிறங்கி விசாரித்தோம்.

மதுராந்தகம் ‘பிகில்’ - கள நிலவரம் என்ன?

இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக பா.ம.க அறிவித்தவுடன் குஷியானது த.வெ.க கூடாரம். ‘`பட்டியல் சமூக வாக்குகள் நம் பக்கம்தான் இருக்கின்றன. வன்னியர் வாக்குகளும் வசமாகிவிட்டால், எதிரணிக்கு டெபாசிட்கூடக் கிடைக்கவிடாமல் தடுத்துவிடலாம்’’ என்ற கணக்குடன் களமிறங்கினார், மதுராந்தகம் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல். அவருக்கு அதிர்ச்சியளிக்கும்விதமாக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் 33 மாவட்டச் செயலாளர்களை மதுராந்தகத்தில் களமிறக்கினார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ‘வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவந்தது. த.வெ.க ஆட்சியில் வன்னியர்களைவிட, பட்டியல் சமூகத்தினருக்கு அதிக பிரதிநிதித்துவம் அளித்திருப்பது’ எனப் பல விஷயங்களை திண்ணைப் பிரசாரமாகக் கொண்டு போகிறது அ.தி.மு.க டீம்.

அதேபோல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க செயலாளர்கள், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தினசரி தொகுதி முழுவதும் சுழன்று வருகின்றனர். ‘ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து வாக்கு கேட்க வேண்டும்’ என ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதால், பம்பரமாகச் சுழல்கிறது தி.மு.க. இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் த.வெ.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது மதுராந்தகம். அதை உளவுத்துறையும் தன்னுடைய ரிப்போர்ட்டில் முதல்வருக்கு அளித்திருப்பதுதான் ஆறுதல் செய்தி.

நம்மிடம் பேசிய அமைச்சர்கள் சிலர், “தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எத்தனை வியூகங்களை வகுத்தாலும், முதல்வர் விஜய்க்கான செல்வாக்கு மதுராந்தகம் தேர்தல் களத்தில் குறையவில்லை. அவருடைய பிரசாரத்துக்குப் பிறகு ஆதரவு மேலும் அதிகரிக்கக்கூடும். ஆனாலும்கூட, வன்னியர்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாக ரிப்போர்ட் அளித்திருந்தது உளவுத்துறை. அதைச் சரிக்கட்டும் பொருட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்துக்குச் சென்று, அதன் துணைத்தலைவர் செந்தில்குமாரிடம் ஆசிபெற்றிருக்கிறார் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். அடுத்ததாக அமைச்சர் கடலூர் ராஜ்குமாரும் மேல்மருவத்தூருக்குச் செல்லவிருக்கிறார்.

மொத்தமிருக்கும் 285 பூத்-களில், ‘25 பூத்-களுக்கு ஒரு அமைச்சர்’ என்று பொறுப்பாளர்களைப் பிரித்து நியமித்திருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. `அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு, முதல்வர் கையால் சிறப்புப் பரிசு வழங்கப்படும்’ எனக் கூறியிருக்கிறார்கள். முதல்வர் கையால் வெகுமதி பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நிர்வாகிகளெல்லாம் சுற்றிச் சுழல்கிறார்கள். தொகுதியிலுள்ள இளைஞர்கள் பெரும்பாலும் சென்னையில்தான் பணிபுரிகின்றனர். தேர்தல் நாளன்று, செங்கல்பட்டு மாவட்டத்துக்குத்தான் லோக்கல் விடுமுறை விடப்படும் என்பதால், அந்த இளைஞர்கள் வாக்களித்துவிட்டு வேலைக்குச் செல்வதை உறுதிப்படுத்தச் சொல்லியிருக்கிறது உளவுத்துறை. இப்போதைக்கு, மதுராந்தகத்தில் த.வெ.க ‘பிகில்’ ஊதுவது உறுதியாகியிருக்கிறது.

செங்கோட்டையன் ‘ஜகா’... தாராபுரத்தில் ‘திகில்’... உளவுத்துறை ‘ஷாக்’!

ஆனால், தாராபுரத்தின் நிலைமைதான் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தாராபுரத்தில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக, கொங்கு வேளாள கவுண்டர்கள்தான் இருக்கிறார்கள். அந்தச் சமூகத்துக்கு சுமார் 95,000 வாக்குகள் இருக்கின்றன. அடுத்ததாக, பட்டியல் சமூகத்தினரும் இருக்கின்றனர். களத்திலிருக்கும் கடும் எதிர்ப்பு காரணமாக, பிரசாரம் செய்யவே பயப்படுகிறார் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா. சமாதானப்படுத்தித்தான் அவரைப் பிரசாரத்துக்கே அழைத்து வருகிறார்கள். த.வெ.க-வினரும் உற்சாகமாக வேலை செய்யவில்லை.

‘சக்தியபாமா மீதான அதிருப்தியை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்ற அமைச்சர் செங்கோட்டையன், சத்தியபாமாவுக்குக் காய்ச்சல் எனச் சொல்லி பிரசாரத்துக்கே செல்லவிடாமல் தடுக்கிறார். சில அமைச்சர்களையும் வாக்கு சேகரிக்க கிராமங்களுக்குப் போகவிடவில்லை செங்கோட்டையன். எதைக் கேட்டாலும், ‘தளபதி வந்தால் எல்லாம் சரியாகிவிடும்’ எனச் சமாதானம் செய்துகொண்டிருக்கிறார். அவர் ‘ஜகா’ வாங்குவதற்கு உள் அரசியலும் இருக்கிறது.

தாராபுரம் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜை நியமித்திருக்கிறது தலைமை. அவர் நாட்டுக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். வேளாள கவுண்டர் சமூகத்தில் சீனியரான தான் இருக்கும்போது, அருண்ராஜைப் பொறுப்பாளராக நியமித்ததில் செங்கோட்டையன் படு அப்செட். அந்தக் கடுப்பில்தான், அவரும் தேர்தல் வேலை பார்க்கவில்லை. பார்ப்பவர்களையும் தடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த விவரம் உளவுத்துறை மூலமாக முதல்வருக்கு ரிப்போர்ட்டாகச் சென்றுவிட்டது. ‘இதே நிலை நீடித்தால், நீங்கள் பிரசாரத்துக்குச் சென்றாலும்கூட வெற்றிபெற வாய்ப்பில்லை’ என்று எச்சரித்திருக்கிறது உளவுத்துறை.

மேலிடத்திலிருந்து கேள்வி எழுந்த பிறகுதான், தாராபுரம் டவுன் பகுதிகளில் வாழும் முதலியார், செட்டியார், நாடார் சமூக மக்களின் வாக்குகளைக் கவர வியூகங்களை வகுத்திருக்கிறார்கள் பொறுப்பாளர்கள். ‘தொகுதியில் தோல்வியைத் தழுவினால், அதைவைத்தே அருண்ராஜை முதல்வரிடமிருந்து ஓரங்கட்டிவிடலாம்’ என்ற சூழ்ச்சிக் கணக்கில், உள்ளடி வேலைகள் தாண்டவமாடுகின்றன. முதல்வர்தான் இதைச் சரிசெய்ய வேண்டும்” என்றனர் விரிவாக.

எடுபடும் எடப்பாடியின் பிரசாரம்!

நம்மிடம் பேசிய தாராபுரத்தைச் சேர்ந்த வணிகர்கள் சிலர், “தொகுதியிலுள்ள கவுண்டர் சமூக வாக்குகள் பெரும்பாலும் அ.தி.மு.க-வுக்குத்தான் விழும். கட்சியில் இருக்கும் அருந்ததியர் சமூக நிர்வாகிகளை வைத்து, அந்தச் சமூகத்தினரிடம் வாக்கு வேட்டையாடுகிறது அ.தி.மு.க. ‘மக்களை ஏமாற்றிவிட்டு கட்சி தாவியவருக்கு மீண்டும் வாக்களிக்கக் கூடாது’ என்று எடப்பாடி பழனிசாமி செய்யும் பிரசாரம் கவுண்டர் சமூகத்தினரிடம் நன்றாகவே எடுபடுகிறது.

அதேசமயம், தாராபுரம் தேர்தலை கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டிருக்கும் தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, சக்கரபாணி, பெரியசாமி, மு.பெ.சாமிநாதன் என அனுபவஸ்தர்களைக் களமிறக்கியிருக்கிறது. ஆளுக்கு ஒரு ஒன்றியம் எனப் பிரித்துக்கொண்டு, ஊர்த் தலைவர்களில் தொடங்கி குடும்பத் தலைவர்கள் வரை ஒருவரையும் விட்டுவைக்காமல் வாக்கு வேட்டையாடுகிறது இந்த டீம். வாக்காளர்களைத் தனித்தனியாகச் சந்திக்க கரூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் அடங்கிய சிறப்புக்குழுக்கள் தாராபுரத்தில் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள்தான் பூத் வாரியாக வாக்காளர்களை அணுகிவருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளின் களப்பணியோடு ஒப்பிடுகையில், த.வெ.க ரொம்பவே தடுமாறுகிறது” என்கிறார்கள்.

அதிருப்தியில் திருமா!

`மதுராந்தகத்தில் ஏறு முகம், தாராபுரத்தில் இறங்கு முகம்’ என்று ரிப்போர்ட் கிடைத்ததில் முதல்வர் ரொம்பவும் அப்செட். இதற்கிடையே, கூட்டணிக் கட்சிகளும் உஷ்ணத்தில் இருப்பதால், என்ன செய்வதெனப் புரியாமல் தவித்துப் போயிருக்கிறது த.வெ.க கூடாரம்.

நம்மிடம் பேசிய த.வெ.க கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சிலர், “தி.மு.க சார்பில் களமிறங்கும் மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமனும், தாராபுரம் வேட்பாளர் சுகன்யாவும் தொகுதிக்குள் செல்வதற்கு முன்பாக, அவரவர் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆனால், த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் மரியாதைக்குக்கூட கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கவில்லை. இதில், வி.சி.க தலைவர் திருமாவளவன் கடும் அதிருப்தியடைந்துவிட்டார். அந்தக் கோபத்தில்தான், இடைத்தேர்தலுக்குப் பணியாற்றவேண்டிய வி.சி.க நிர்வாகிகளின் பட்டியலை தயாரித்தும், அதை வெளியிடாமல் வைத்துவிட்டார்.

மதுராந்தகத்திலேயே, வி.சி.க நிர்வாகிகள் என்ன செய்வதெனப் புரியாமல், பட்டும் படாமல்தான் தேர்தல் வேலை பார்க்கிறார்கள். அதேபோல, காங்கிரஸ் கட்சியும் பிரசாரத்துக்கு வர வேண்டுமென த.வெ.க எதிர்பார்க்கவில்லை. இதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூரும் அப்செட். ‘கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையையும் முதல்வர் விஜய் தரப்பு மறுத்துவிட்டதால், கூட்டணியில் இருப்பவர்களெல்லாம் வெறுத்துப் போய்விட்டோம்” என்கிறார்கள்.

கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி, உளவுத்துறையின் ‘ஷாக்’ ரிப்போர்ட் என்று பல நெருக்கடிகள் முளைத்தாலும், முதல்வரின் பிரசாரம், ரோடு ஷோ மூலமாக அனைத்தையும் சரிக்கட்டிவிடலாம் என்று கணக்கு போடுகிறது த.வெ.க. அவர்களுடைய கணக்கு பலித்திருக்கிறதா என்பது இன்னும் பத்து நாள்களில் தெரிந்துவிடும்!