தமிழ் அன்பர்களுக்கு ஓர் இலக்கியத் துணைவன்..! | நூல் வெளி
கம்பரின் இலக்கியப் பார்வையும் கவிதைப் பேராற்றலும் நிலத்தினும் பெரிது. வானினும் உயர்ந்தது. நீரினும் ஆரளவில்லாதது. வடமொழியும்
தென்தமிழும், மறைகள் நான்கும் கற்றுணர்ந்த கம்பர், தனக்கு முன்னிருந்த தமிழிலக்கியங்களில் மூழ்கி முத்தெடுத்தவர்.
கம்பரின் இராமகாதைப் பாடல்களை, ‘கம்பராமாயணம் அருங்கவி அமுதம்’ என்ற தலைப்பில் இரண்டே தொகுப்புகளாக, கையடக்க நூலாக வெளியிட்டுள்ளார் பேராசிரியர் ப.சுப்பிரமணியன். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1,915 செய்யுள்களும் அவற்றுக்கான உரைவிளக்கமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நூலின் முதல் பாகத்தின் தொடக்கத்தில், ‘கம்பராமாயணம் நூலமைப்பும் சிறப்பும்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை விரிவாக அமைந்துள்ளது. இதனுள் கம்பர் - பெயர்க்காரணம், ஆதரித்த வள்ளல், கவிக்கூற்று, பாத்திரக் கூற்று, புலமை நலம், சொல்லாட்சி, கம்பரின் காலம் போன்ற உட்தலைப்புகளின் கீழ் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன.