மோசமடையும் சிங்கப்பூரின் புகைமூட்டம்: கிழக்கு
சிங்கப்பூரில் புகைமூட்டம் மோசமடைந்து வருகிறது. குடியரசின் மத்தியப் பகுதியை அதிகம் பாதித்த புகை, தற்போது கிழக்கு, மேற்கு வட்டாரங்களையும் சூழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) காலை நிலவரப்படி அங்கு தற்போதையக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
அந்த வட்டாரங்களில் 24மணிநேர காற்றுமாசு தரக் குறியீடு (பிஎஸ்ஐ) தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
அன்றைய தினம் காலை 7 மணியளவில் தீவின் பிஎஸ்ஐ குறியீடு கிழக்கில் 102 எனவும் மேற்கில் 123 என்ற எண்ணிக்கையையும் பதிவுசெய்தது. குறியீட்டின்படி அப்போது வடக்குப் பகுதி 84 எனவும் தெற்கில் 88 எனவும் மிதமான நிலையில் காற்றுத்தரம் இருந்தது.
மத்திய வட்டாரம் சனிக்கிழமை மதியம் 1 மணிமுதல் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. நாட்டின் மற்ற பகுதிகள் நாள்முழுவதும் மிதமான அளவில் இருந்த வேளையில் மத்திய பகுதி அந்த நிலைக்கு வரநேர்ந்தது.
அதற்கிடையே கிழக்கு வட்டாரம் மெதுவாக 102 என்ற குறியீட்டை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவிலும் மேற்குப் பகுதி காலை 4 மணியளவிலும் அன்றைய தினம் எட்டின.
காற்றுத் தரம் 101 முதல் 200 என்ற தரக்குறியீட்டு எண்ணிக்கையை எட்டினால் அது ஆரோக்கியமற்றது என்று கருதப்படுகிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) அதுபோன்ற சூழ்நிலையில் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளது.
காற்றுத் தரக் குறியீடு 51 முதல் 100 வரை பதிவுசெய்யப்பட்டால் அது மிதமான அளவு எனவும் அதுவே 0 முதல் 50க்குள் எனப் பதிவானால் அதனை ‘நல்ல’ தரம் என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.