📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 10, 2026 06:03 PM

மனநலம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடக வல்லுநருக்கு விருது

மனநலம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடக வல்லுநருக்கு விருது

செய்திக் கட்டுரைகள், வலையொளிகள் மூலம் மனநலம் குறித்த பொதுமக்களின் புரிதலை உயர்த்துவதில் ஆற்றிய பணிக்காக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் மூத்த சுகாதார நிருபர் ஜாய்ஸ் டியோ, ஊடக வல்லுநர்களை அங்கீகரிக்கும் முதலாவது ‘வெள்ளிநாடா மனநல விருதை’ வென்றார்.

“மனநலம் குறித்த பொது உரையாடல்களையும் அணுகுமுறைகளையும் வடிவமைப்பதில், செய்தியாளர்கள், ஒலிபரப்பாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் போன்ற ஊடகத் துறையினரின் வளர்ந்து வரும் செல்வாக்கை இந்தப் புதிய ‘மனநல விழிப்புணர்வில் ஊடகச் சிறப்பு விருது’ பிரதிபலிக்கிறது,” என்று லாப நோக்கற்ற சிங்கப்பூர் வெள்ளிநாடா அமைப்பு கூறியது.

தகவல்களுக்காக அதிகமான மக்கள் பாரம்பரிய, மின்னிலக்க ஊடகங்களை நாடுவதால், பொதுவெளியில் பகிரப்படும் மனநலத் தகவல்கள் துல்லியமானதாகவும் நம்பகமானதாகவும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதாகவும் பொறுப்புமிக்கதாகவும் இருப்பது மிகவும் முக்கியம் என்று அந்த அமைப்பு கூறியது.

2004ஆம் ஆண்டு முதல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் பணியாற்றி வரும் டியோ, மனநல விழிப்புணர்வை மேம்படுத்துதல், களங்கத்தைக் குறைத்தல், மக்களை முன்கூட்டியே உதவி நாட ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக சனிக்கிழமையன்று (அக்டோபர் 10) கௌரவிக்கப்பட்ட 57 தனிநபர்கள், அமைப்புகளில் ஒருவராக இருந்தார்.

“இந்த விருதை, அந்தக் கதைகளுக்கும், தங்கள் வாழ்வில் என்னை அனுமதித்த துணிச்சலான தனிநபர்களுக்கும் கிடைத்த ஓர் அங்கீகாரமாக நான் பார்க்கிறேன்,” என்றார் டியோ.

“இந்தக் கதைகள் முக்கியமானவை என்பதையும், வாசகர்கள் கவனம் செலுத்துகிறார்கள் என்பதையும், நமது சமூகத்தில் பச்சாதாபத்தையும் புரிதலையும் வளர்ப்பதில் செய்தியாளர்களாகிய நமக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது என்பதையும் இந்த விருது எனக்கு மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்றார்.

“ஜாய்ஸ் ஒரு செய்தியாளராக தனது நிலையைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தவறான தகவல்களைக் குறைத்து, மனநலம் பற்றிய முழுமையான புரிதலை ஊக்குவிப்பதன் மூலம் களங்கத்தைக் குறைக்க உதவியுள்ளார் என்றார் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த நிதி மற்றும் மனிதவள அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங்.