இளைஞர்களுடன் உறவுகளை வளர்த்து, கிறிஸ்தவக் குடும்ப வாழ்வை ஊக்குவிக்க வேண்டும்: பேராயர் கஸ்டெல்லோ
இளைஞர்களுடன் உறவுகளை வளர்த்து, கிறிஸ்தவக் குடும்ப வாழ்வை ஊக்குவிக்க வேண்டும்: பேராயர் கஸ்டெல்லோ
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஆஸ்திரேலியாவின் பெர்த் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் டிம் கஸ்டெல்லோ அவர்கள்,இளைஞர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளைக் கட்டியெழுப்பும் அதே வேளையில், திருமணம் மற்றும் குடும்பம் குறித்த திருஅவையின் பார்வையைப் பறைசாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘அன்பின் மகிழ்ச்சி’ திருத்தூது அறிவுரை மடலின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய பேராயர் கஸ்டெல்லோ அவர்கள், இம்மாநாடு கடந்த பத்தாண்டுகளை மீளாய்வு செய்வதுடன் நின்றுவிடாமல், கிறிஸ்தவத் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வைத் திருஅவை தொடர்ந்து எவ்வாறு ஊக்குவித்துக் கொண்டாடுவது என்பதையும் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
திருமணம் மற்றும் குடும்பங்கள் தொடர்பான பல சவால்கள் உலகம் முழுவதும் பொதுவாகவே உள்ளன என்று குறிப்பிட்ட பேராயர் கஸ்டெல்லோ அவர்கள், இருப்பினும் கலாச்சார சூழல்களுக்கு ஏற்ப நமது பதில்கள் மாறுபட வேண்டும் என்றும், குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற பிற பகுதிகளின் அனுபவங்களைக் கேட்பது ஒரு அறிவொளி ஊட்டும் அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.
இளைஞர்களை ஒரே குழுவாகக் கருதாமல், ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் உணர்ந்து அணுக வேண்டும் என்று வலியுறுத்திய பேராயர் கஸ்டெல்லோ அவர்கள், இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எளிய தீர்வுகள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
திருஅவை தனது செய்தியைத் திறம்பட எடுத்துரைக்க தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று அடிக்கோடிட்டுக் காட்டிய பேராயர் கஸ்டெல்லோ அவர்கள், சவால்கள் இருந்தாலும், இளைஞர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்து செயல்படவும், அவர்களின் நம்பிக்கைப் பயணத்தில் துணை நிற்கவும் தேவையான வளங்கள் திருஅவையிடம் உள்ளன என்று நம்பிக்கை தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.