மின்சார வாகன ஊக்கத்தொகை குறைப்பு: கார் வாங்க விரைவோர்
வாகன உரிமைச் சான்றிதழ் முறையில் மாற்றங்களை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பரிந்துரை அறிவிக்கப்பட்டதற்குப் பிந்திய, முதல் வார இறுதியில் கார் காட்சி அறைகளில் வழக்கமான வணிகம் நடைபெற்றது.
36 ஆண்டுகள் பழமையான சிஓஇ கட்டமைப்பில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் குறித்த நிச்சயமற்ற நிலையைவிட, 2027 ஜனவரி முதல் மின்சார வாகனங்களுக்கான ஊக்கத்தொகை குறைக்கப்படவுள்ள கெடுவே தங்களின் உடனடி கவனமாக இருப்பதாகக் கார் வாங்குபவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.
வாகன கரிம வெளியேற்றத் திட்டம் (VES), மின்சார வாகனங்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள ஊக்குவிப்புத் தொகை (EEAI) ஆகியவற்றின்கீழ் தற்போது $30,000வரை தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால், 2027 முதல் இந்த ஊக்கத்தொகை $20,000 ஆகக் குறையும் என்பதால், அதற்குள் கார் வாங்கப் பலர் முனைகின்றனர்.
ஆணையம் அக்டோபர் 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஏ , பி பிரிவுகளை ஒன்றிணைத்து, காரின் மதிப்பின் அடிப்படையில் தள்ளுபடி அல்லது கூடுதல் கட்டணம் விதிக்கும் முறையைப் பரிந்துரைத்துள்ளது. ஐந்து அல்லது மூன்று கட்டங்களைக் கொண்ட அத்திட்டத்தில், குறைந்த மதிப்புள்ள கார்களுக்கு $15,000 வரை தள்ளுபடியும், அதிக மதிப்புள்ள கார்களுக்கு $15,000 வரை கூடுதல் கட்டணமும் விதிக்கப்படலாம்.
அண்மைய ஏலத்தின் போது ‘ஏ’, ‘பி’ பிரிவு சிஓஇ கட்டணங்கள் முறையே $130,001,$130,100 ஆக உயர்ந்துள்ள நிலையில், இம்மாற்றங்கள் குடும்பத் தேவைகளுக்காக கார் வாங்குபவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.
சொகுசு கார்களை வாங்குவோர் நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து வரும் நிலையில், வழக்கமான கார்களை வாங்குவோர் ஊக்கத்தொகை குறையும் முன் விரைந்து முடிவெடுத்து வருகின்றனர்.