”மீண்டும் எலிக்கறி உணவுக்கு தள்ளப்படுவோம்”
”மீண்டும் எலிக்கறி உணவுக்கு தள்ளப்படுவோம்” - கதறும் டெல்டா விவசாயிகள்... கண்விழிக்குமா தமிழக அரசு?
‘மேட்டூரிலிருந்து வீராணம் ஏரிக்கு தினமும் விடப்படும் 300 கன அடி தண்ணீரில், சென்னை குடிநீருக்காக 100 கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் எங்களால் சம்பா சாகுபடி செய்ய முடியவில்லை’ என்று போராட்டத்தில் குதித்திருக்கின்றனர் கடலூர் மாவட்ட விவசாயிகள்.
டெல்டா மாவட்டங்களின் உயிரே காவிரி நீரில்தான் அடங்கியிருக்கிறது. காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ந்தால், டெல்டாவில் விவசாயம் செழிக்கும்; விவசாயிகள் செழிப்பாக இருப்பார்கள். தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காதபோது விவசாயம் பாதிக்கப்பட்டு கடும் வறட்சி ஏற்படும்.
இந்த ஆண்டு, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால், ஜூன்–ஜூலை மாதங்களில் மேற்கொள்ளவேண்டிய குறுவைச் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் 1-ம் தேதி தாமதமாகத் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி, விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பை மேற்கொண்டனர். ஆனால், அந்தப் பயிருக்கும் போதுமான தண்ணீர் கிடைக்காததால், பல பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் கருகிவருகின்றன. குறுவை கைவிட்ட நிலையில், சம்பாவையும் காப்பாற்ற முடியாதோ என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர்.
டெல்டா விவசாயிகளைக் காவு வாங்கிய வறட்சி!
தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதாலும், கர்நாடகாவிலிருந்து தண்ணீரைப் பெற முடியாததாலும், 2002-ம் ஆண்டு டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட வறட்சிக் கொடுமையை அவ்வளவு எளிதில் மறந்திருக்காது தமிழ்நாடு. பஞ்சத்தையும் கடனையும் எதிர்கொள்ள முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். பட்டினிக் கொடுமையால் விவசாயிகள் எலிகளைப் பிடித்து உணவாக்க, ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துபோனது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்துவரும் நிலையில், “மீண்டும் எலிக்கறி, பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்படுகிறோம்” என்று கதறுகின்றனர் டெல்டா விவசாயிகள்.
இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்ச்செல்வன், “டெல்டாவில் ஒட்டுமொத்த சாகுபடி இலக்கான 12 லட்சம் ஏக்கர் என்கிற அளவை விவசாயிகள் எப்படியும் எட்டிவிடுவார்கள். ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் சம்பா சாகுபடி தண்ணீர்ப் பற்றாக்குறையால் என்னவாகும் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. கடைமடையான நாகை மாவட்டம் மட்டுமல்ல, தஞ்சை மாவட்டத்தில் கல்லணைக்குக் கீழே இருக்கும் பகுதிகளுக்குக்கூட தண்ணீர் வந்து சேரவில்லை என்கிறார்கள் விவசாயிகள். நாகை, திருவாரூரில் பல பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிய நிலையில், விவசாயிகள் மீண்டும் நேரடி விதைப்பைச் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் சம்பா சாகுபடியைக் காப்பாற்ற 45 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று கூறியிருக்கிறது அரசு. அதன்படி இந்த மாதம் 15-ம் தேதி வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் எப்படிப் பயிர்களைக் காப்பாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
“வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்!”
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், “காவிரிநீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், இரண்டு மாதங்களுக்கும் மேல் தாமதமாகத் திறக்கப்பட்டது. அதனால், ஆற்றுநீரை நம்பிப் பயிர் செய்யக்கூடிய பகுதிகளில் எந்த விவசாயியும் குறுவைச் சாகுபடியை மேற்கொள்ள முடியவில்லை. கடைமடைக்குப் போதிய தண்ணீரும் கிடைக்கவில்லை.
பின்னர் சம்பா சாகுபடிக்காக நேரடி விதைப்பில் முளைத்த நெற்பயிரும் தண்ணீர் பற்றாக்குறையால் கருகிவிட்டது. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்ட சூழலில் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். அதனால், டெல்டா பகுதியை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் பாதிப்பைக் கண்டறிய சிறப்புக்குழுவை அமைத்து. கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
வீராணம் ஏரியிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை!
அது குறித்து நம்மிடம் பேசிய கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விநாயக மூர்த்தி, “வீராணம் ஏரிப் பாசனத்தை நம்பி காட்டுமன்னார்கோயிலைச் சுற்றி சுமார் 20,000 ஏக்கரில் சம்பா சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எங்களுக்குப் போதுமான தண்ணீர் திறந்துவிடப்படாததால், பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மேட்டூரிலிருந்து தற்போது பெறப்படும் 15,000 கன அடி நீரை 18,000-ஆக உயர்த்திப் பெற்று, எங்களுக்குத் தேவையான தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்” என்றார்.
வேளாண்துறை அமைச்சர் வினோத்திடம் கேட்டபோது, “விவசாயமும் விவசாயிகளும் பாதிக்கப்படாதவாறு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் விஜய். அதன்படி பணிகள் நடக்கின்றன” என்றார்.
விவசாயிகள் எலிக்கறியைத் தேடிச் செல்லும் நிலையைத் தவிர்க்குமா அரசு?