குழந்தைகளை வைத்து பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
குழந்தைகளை வைத்து பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
தமிழக முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் குழந்தையை வைத்து பேச வைத்ததாகவும், காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published : October 5, 2026 at 11:13 AM IST
திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், பிரசாரத்தின் போது விதிமுறைகளை மீறி 8 வயது சிறுவனைப் பயன்படுத்தியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகம் தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதிவியை ராஜிநாமா செய்துவிட்டு த.வெ.க-வில் ஐக்கியமாகினர். இந்நிலையில், காலியான தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக். 6) நடக்கவுள்ளது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்வடைந்துள்ள நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரச்சாரக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக, தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் குழந்தைகளை நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளை தேர்தல் பிரச்சாரம், பேரணி, முழக்கங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று தாராபுரம் டவுன் பகுதியில் பெரியார் சிலை அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, குழந்தை ஒன்றை வைத்து பேச வைத்ததுடன், தேர்தல் பிரச்சார நடவடிக்கையிலும் அந்த குழந்தையை பயன்படுத்தியதாக திருப்பூர் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விவரங்கள் மற்றும் அங்கு பதிவான காணொளிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.