கீழடி அறிக்கையை வெளியிடாமல் அரசியல் காரணம் கூறுவது ஏன்? சு.வெங்கடேசன் கண்டனம்
கீழடி அறிக்கையை வெளியிடாமல் அரசியல் காரணம் கூறுவது ஏன்? சு.வெங்கடேசன் கண்டனம்
அறிக்கையை தடுத்து நிறுத்துவதன் மூலம் கீழடியின் வரலாற்று உண்மையை மறைக்க முடியாது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Published : September 22, 2026 at 7:21 PM IST
மதுரை: கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருப்பது தீவிரமான குற்றச்சாட்டு எனக் கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், இதுதொடர்பான ஆதாரங்களை அவர் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மகபூப் பாளையத்தில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கீழடி அகழாய்வு அறிக்கை அரசியல் தாக்கம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஒன்றிய அமைச்சர் முன்வைத்துள்ளார். இது உண்மையான குற்றச்சாட்டு என்றால், அதற்கான ஆதாரங்களை ஒன்றிய அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
தெளிவுபடுத்துமா ஒன்றிய அரசு?
அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் அகழாய்வு மேற்கொண்டபோது, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோதும் அதே ஆட்சிதான் இருந்தது. அப்படியானால், அவர் மேற்கொண்ட அகழாய்வுக்கும் அன்றைய அரசுக்கும் அரசியல் தொடர்பு இருந்ததாக ஒன்றிய அரசு கருதுகிறதா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணனே கீழடி அகழாய்வு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அந்த தீர்ப்புக்கும் அரசியல் பின்னணி இருப்பதாக ஒன்றிய அரசு கூறுகிறதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. முதலில் அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் 9 மாதங்களுக்குள் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. அந்த காலக்கெடுவும் முடிந்துவிட்டது.
அறிவியல் ரீதியான பதில் அல்ல
அதன்பிறகு நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிபுணர் குழு அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த நிபுணர் குழு எழுப்பிய கேள்விகளுக்கும் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதிலளித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அறிக்கையை வெளியிட வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. அறிக்கை சரியானது என்றால் அதை வெளியிட வேண்டும். அறிக்கையில் தவறு இருப்பதாக ஒன்றிய அரசு கருதினால், எந்தப் பகுதியில் தவறு உள்ளது, எந்த அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் அந்த முடிவு தவறானது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இந்த ஆய்வு முடிவுகள் தவறானவை என்றால், எந்த ஆய்வு நிறுவனம் அவற்றை மறுக்கிறது, எந்தத் தரவு தவறானது, அதற்கான அறிவியல் ஆதாரம் என்ன என்பதை ஒன்றிய அரசு விளக்க வேண்டும்.
அரசியல் குற்றச்சாட்டு
இது தமிழ்நாட்டுக்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல. இந்தியத் தொல்லியல் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வது தொடர்பான பிரச்சினையாகும். வேதகால நாகரிகமே இந்தியாவின் தொன்மையான நாகரிகம். இந்தியாவின் அறிவு மரபுகள் அனைத்தும் வேதத்திலிருந்தே தொடங்குகின்றன. பாஜக முன்வைக்கும் இந்துத்துவக் கருத்தியலுக்கு மாறான வரலாற்றுச் சான்றுகளை கீழடி அகழாய்வு முன்வைக்கிறது” என குற்றஞ்சாட்டினார்.
மேலும், “கங்கை சமவெளி நகர நாகரிகத்திற்கு முந்தைய காலத்திலேயே தென்னிந்தியாவில் நகரமயமான பண்பாடு இருந்ததற்கான சான்றுகளை, கீழடி அகழாய்வுகள் வெளிப்படுத்துவதால், இந்த ஆய்வை ஏற்க முடியாமல் ஒன்றிய அரசு தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி அறிக்கையை வெளியிடாமல் தடுத்து வருகிறது.
கீழடி அறிக்கையில் தவறு இருப்பதாக ஒன்றிய அரசு கருதினால், அதனை அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், மூன்று ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணனின் அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அறிக்கையை தடுத்து நிறுத்துவதன் மூலம் கீழடியின் வரலாற்று உண்மையை மறைக்க முடியாது” என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.