📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 05, 2026 03:04 PM

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர், நண்பகல் 12.57 முதல் அந்த வழித்தடத்தில் வழக்கம் போல் புறநகர் ரயில் சேவை தொடங்கியது.

Published : October 5, 2026 at 1:34 PM IST

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் சக்கரங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான புறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி இன்று காலை வந்த மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் நின்ற போது, ரயிலின் ஐந்தாவது பெட்டியின் சக்கரங்கள் திடீரென தடம் புரண்டன.

இதையடுத்து, செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்கும் மற்றும் சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்து காரணமாக, இதனைத் தொடர்ந்து தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மற்றொரு மின்சார ரயிலும் உடனடியாக நிறுத்தப்பட்டது. திடீரென பிரேக் அடிக்கப்பட்டதால், அந்த ரயிலில் பிரேக் லாக் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ரயிலையும் சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று காலை 10:42 மணியளவில், சென்னை ஃபோர்ட் (Chennai Fort) ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை (Chennai Beach) இடையிலான மின்சார ரயிலின் (EMU) ஒரு ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இருப்பினும், தற்போது சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் மற்றொரு தண்டவாளத்தின் வழியாக ரயில்கள் இயக்கப்பட்டன. தாம்பரம் நோக்கிய ரயில் சேவைகள் சென்னை பார்க் (Chennai Park) மற்றும் சென்னை எழும்பூர் (Chennai Egmore) நிலையங்களிலிருந்து இயக்கப்பட்டன.

விபத்து நிவாரண ரயில் (Accident Relief Train) சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, சீரமைப்புப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர்.

தற்போது நிலைமை சீரடைந்ததை அடுத்து, பிற்பகல் 12.57 சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.