📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 05, 2026 11:03 AM

சிங்கப்பூரில் மீலாது விழா சிறப்புச் சொற்பொழிவு

சிங்கப்பூரில் மீலாது விழா சிறப்புச் சொற்பொழிவு

சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாட்டில் சுல்தான் பள்ளிவாசல் மற்றும் 19 இந்திய முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவில் வெகு விமரிசையாக மீலாது விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளராகச் சென்னை கோடம்பாக்கம் ரஹீமா பள்ளிவாசலின் இமாம் உஸ்தாத் ஏ.எஸ்.சதக்கத்துல்லாஹ் பாகவி கலந்துகொண்டு பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத்தந்த சமூக ஒற்றுமை, இன நல்லிணக்கம், அன்பு, குடும்பப் பிணைப்பு பற்றிய தகவல்களை நகைச்சுவையாகப் பேசி பார்வையாளர்களை ஒரு மணி நேரம் பரவசப்படுத்தினார். இதில் 350க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர். மேலும் தொடக்கமாக நாகூர் காதர் மொய்தீன் மற்றும் கொடிக்கால்பாளையம் காதர் ஒலி, நபிகள் நாயகம் பற்றிய பாடல்களை இசையின்றிப் பாடினார்கள். மீலாதுன் நபி ஆவணப்படத்தின் சில பாடல்களும் ஒளிப்பரப்பட்டது.இந்நிகழ்வில் முத்தாய்ப்பாக, திருக்குர்ஆனில் வரும் விலங்குகள், பூச்சிகள், மலக்குகள், நபிகள் பெயர்கள் இதில் ஏதேனும் ஒன்றை மனதில் நினைத்துக்கொள்ளவேண்டும். ஆலிமா உம்மு உமாரா சில கேள்விகளைக் கேட்பார். அதற்கு நினைத்தவர் ஆம் இல்லை என்று பதில் சொல்லவேண்டும். ஒரு சில கேள்விகளில் அவர் நினைத்ததை ஆலிமா உம்மு உமாரா சரியாகக் கண்டுபிடித்துச் சொன்னார். இந்த அங்கத்தை அனைவரும் பாராட்டினார்கள்.நாகூர் ரூமி எழுதிய நபிமொழிக் கவிதைகள் என்ற நூல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை ஹாஜி கபீர் மரைக்காயர் வெளியிட, பேராசிரியர் ஹாஜி நகுதா மரைக்காயர் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் நாகூர் ரூமி நூல்களை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கினார்.தமிழ் முஸ்லிம் ஜமாஅத் 75ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் இவ்வேளையில் சமூகத்திற்குப் பயனளிக்கும் மேலும் பல தரமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. குறிப்பாக இரத்த தான முகாம், மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி, மருத்துவம் சார்ந்த கலந்துரையால் நிகழ்ச்சிகள் செய்துவருகிறோம் என்று சொன்னார் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹாஜி கபீர் மரைக்காயர். ஜமாஅத்தின் பொருளாளர் ஹாஜி ராஜிக் நஹ்வி சிறப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்