📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 01, 2026 08:02 AM

#BREAKING வணிக சிலிண்டர் விலை ரூ.10 உயர்ந்தது!... வீட்டு உபயோக சிலிண்டர் விலையில்..?

#BREAKING வணிக சிலிண்டர் விலை ரூ.10 உயர்ந்தது!... வீட்டு உபயோக சிலிண்டர் விலையில்..?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை (Crude Oil Price) மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு (USD to INR) ஆகியவை எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதாவது, உலகளாவிய சந்தை நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள், இறக்குமதி சமநிலை விலை (import parity price) மற்றும் துறைமுகக் கட்டணங்கள், சுங்க வரிகள், சரக்குக் கட்டணங்கள், ஜிஎஸ்டி (GST) மற்றும் பிற செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எல்பிஜி (LPG) விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையிலேயே, ஒவ்வொரு மாதமும் 1-ம்தேதி HPCL, BPCL மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோகச் சிலிண்டர் (எல்பிஜி ) அல்லது 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டர்களின் விலைகளில் திருத்தங்களை செய்கின்றன. சில மாதங்களில் திருத்தம் ஏற்படாமலும் இருப்பதுண்டு.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. உலகளாவிய அரசியல் பதற்றம் அல்லது உற்பத்தி குறைப்பால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவிலும் எரிபொருள் விலை உயரும்.

தற்போது, ​​சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த நிலையில் உள்ளன. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 83 டாலருக்கும் அதிகமாகவும், பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 88 டாலருக்கும் அதிகமாகவும் உள்ளது. இருப்பினும், கடந்த ஒரு மாதத்தில் WTI விலை 1.21% சரிந்துள்ளது, அதேவேளையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் சிறிய அளவிலான உயர்வு காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் காரணமாக, செப்டம்பர் 1 முதல் எல்பிஜி (LPG) விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வந்தது. அதனை தொடர்ந்து சிலிண்டருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் எரிவாயு சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 200 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தது.

அதன்படி தற்போது வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் ரூ.2,906-க்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.957.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை மாதம் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு ரூ.3,283-லிருந்து ரூ.3,106 ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு (14.2 கிலோ) சிலிண்டரின் விலை ரூ. 957.5 ஆக உள்ளது; கடந்த மாதம் (ஜூலை 3, 2026) இதன் விலை ரூ. 957.5 ஆக இருந்தது. கடந்த ஓராண்டில், சமையல் எரிவாயுவின் விலை ரூ. 89.0 அதிகரித்துள்ளது. கடைசியாக ஜூன் 2026-ல் இதன் விலை ரூ. 29.0 உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி சென்னையில் வழக்கம் போல் ரூ.957.50க்கே விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் சென்னையில் 19 கிலோ வணிய பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து ரூ.2,916.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் ரூ.200 குறைந்த நிலையில் இந்த மாதம் (செப்டம்பர்) 10 ரூபாய் அதிகரித்துள்ளது.