அறிவியல் கலந்த விளையாட்டு! நார்வேயில் கில்லி போல் பட்டத்தை தட்டி வந்த சென்னை ஐஐடி மாணவர்கள்
அறிவியல் கலந்த விளையாட்டு! நார்வேயில் கில்லி போல் பட்டத்தை தட்டி வந்த சென்னை ஐஐடி மாணவர்கள்
சென்னை: ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள், மனிதக் கட்டுப்பாடு இல்லாமலேயே படகுகள் எவ்வாறு தன்னிச்சையாக இயங்கி இலக்கை அடைய முடியும் என்பதைச் சோதிக்கும் சர்வதேச போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளனர். இக்கல்வி நிறுவனத்தின் கடல்சார் பொறியியல் துறையைச் சேர்ந்த 'டீம் அரித்ரா' , நோர்வேயின் ட்ரொண்ட்ஹெய்ம் நகரில் ஆகஸ்ட் 10 முதல் 14 வரை நடைபெற்ற 2026 நியார்ட் சேலஞ்ச் (Njord Challenge) சாம்பியன் பட்டம் வென்றது.
இப்போட்டியில் பங்கேற்ற 9 நாடுகளைச் சேர்ந்த 22 அணிகளை பின்னுக்குத் தள்ளி இந்த இந்திய மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நியார்ட் சவால் தன்னிச்சையாக இயங்கும் படகுகளை உருவாக்கி இயக்குமாறு மாணவர்களுக்கு சவால் விடுப்பதே போட்டி ஆகும்.
ஐஐடி மெட்ராஸ் கடல்சார் பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய சுயமாக இயங்கும் படகு (autonomous surface vessel), அதிநவீன கேமராக்கள், பாதையை கணிக்கும் கருவிகள் மற்றும் கணினி அமைப்புகளைப் பயன்படுத்தி, அதன் சுற்றுப்புறத்தைக் கணித்து எங்கு செல்ல வேண்டும் என்பதைத் தானே தீர்மானிக்கிறது.
படகை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரியாக நிறுத்துதல், தடைகளைத் தவிர்த்தல், வழியைக் கண்டறிந்து பயணித்தல் போன்ற கடினமான சோதனைகள் இந்த அணிகளுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், முன்பே திட்டமிட முடியாத எதிர்பாராதச் சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறனைச் சோதிக்கும் வகையில் ஒரு திடீர் சவாலும் இதில் சேர்க்கப்பட்டிருந்தது.
இப்போட்டியில் ஐஐடி மெட்ராஸின் 'டீம் அரித்ரா' 90.42 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. துருக்கியைச் சேர்ந்த 'எம்ஒய்எஸ் யாவுஸ்' (MYS YAVUZ) அணி 79.90 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், போலந்தின் ஏஜிஹெச் சோலார் போட் (AGH Solar Boat) அணி 79.63 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. வழியைக் கண்டறிதல் மற்றும் படகைக் கட்டுப்படுத்தும் சோதனைகளில் ஐஐடி மெட்ராஸ் அணி முழு மதிப்பெண்களைப் பெற்றது.
ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள நீர் பரிசோதனைக் கூடம் மற்றும் ஏரியில் பல மாதங்களாக மேற்கொண்ட பயிற்சிகள் இந்த வெற்றியைப் பெற மாணவர்களுக்குப் பெரிதும் உதவின.இந்த அணியில் ஆரவ் படேல், எஸ். குருகேசவ் மற்றும் மாதவ சாய் ஆகிய மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர். சுயமாக இயங்கும் கடல்சார் கலங்கள் ஆய்வகத்தின் (Marine Autonomous Vessels Laboratory) ஆதரவோடு, டாக்டர் அபிலாஷ் சர்மா சோமயாஜுலா மற்றும் பேராசிரியர் எம்.ஏ. ஆத்மானந்த் ஆகியோர் இம்மாணவர்களுக்கு வழிகாட்டிகளாகச் செயல்பட்டனர்.
போட்டியின் போது எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்சினைகளையும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடுமையான காந்தக் குறுக்கீடு காரணமாக படகின் திசையறியும் கருவியின் செயல்பாடு பாதிக்கப்பட்டது. மேலும், கேமரா மற்றும் ஜிபிஎஸ் அமைப்புகளும் ஒன்றோடொன்று குறுக்கிடுவதை மாணவர்கள் கண்டறிந்தனர். இந்தச் சவால்களை உடனடியாகக் கண்டறிந்து, படகு தடையின்றி பயணிக்கும் வகையில் மாணவர்கள் மென்பொருள் மற்றும் வன்பொருள்களில் உரிய மாற்றங்களைச் செய்தனர்.
இதுகுறித்து பேசிய மாணவர் எஸ். குருகேசவ் "வழியைக் கண்டறிதல் மற்றும் படகைக் கட்டுப்படுத்துதல் ஆகிய சோதனைகளில் நாங்கள் முழு மதிப்பெண்களை பெற்றோம். இதரப் பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். நோர்வேயின் கடல் நீரோட்ட நிலைகளுக்கு ஏற்ப எங்கள் தற்கல்வி, கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதல் அமைப்புகளைச் செம்மைப்படுத்த நாங்கள் பல மாதங்கள் உழைத்ததே இந்த வெற்றிக்குக் காரணம்" என்றார்.
இது தொடர்பாக பேசிய மற்றொரு மாணவர் ஆரவ் படேல் , "வழக்கமான பாதையிலிருந்து விலகி மாற்று வழிகளில் கடினமாக முயற்சிப்பது எப்போதும் பலனளிக்கும் என்பதை எங்களது இந்தப் பயணம் அனைவருக்கும் நினைவூட்டும் என்று நம்புகிறோம்" என்றார்.
தன்னிச்சையாக இயங்கும் இத்தகைய படகுகள் துறைமுகங்களைக் கண்காணிக்கவும், கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், கடல் சார் தகவல்களைச் சேகரிக்கவும் மற்றும் பல்வேறு நீர்வழி ஆய்வுகளை மேற்கொள்ளவும் பெரிதும் பயன்படும்.
வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, நாட்டின் நலனுக்காக இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லுமாறு மாணவர்களை ஊக்குவித்தார். இதற்கு முன்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற இப்போட்டியில் ஐஐடி மெட்ராஸ் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்ததோடு, அதன் நிலைத்தன்மைக்கான விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.