📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 21, 2026 08:04 PM

ஆவின் பால் தட்டுப்பாடு... தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமா? நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆவின் பால் தட்டுப்பாடு... தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமா? நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆவின் பாலின் கொள்முதல் விலையை ஏற்றிய தவெக அரசு, தனியார் பால் நிறுவனங்களின் நலனுக்காக, ஆவின் பால் விநியோகத்தை திட்டமிட்டு குறைக்கிறதா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஆவின் பால் விநியோகம் குறைவு

தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களின் அடிப்படைத் தேவையான ஆவின் பால் விநியோகம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது குறித்து பலமுறை நாம் கேள்வியெழுப்பியும், மக்களின் ஆரோக்கிய சீர்கேடு குறித்து எச்சரித்தும், பால் உற்பத்தியைப் பெருக்க முதல் -அமைச்சர் விஜய் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ. 38 லிருந்து ரூ. 44 ஆக உயர்த்தி அரசாணை வெளியானதில் இருந்து, அந்த நிதியிழப்பை ஈடுகட்ட ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் விநியோகம் கிட்டத்தட்ட 10% வரை குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்தை தவெக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

தனியாருக்கான அரசா...

செலவுகள் கூடும் பொழுது, அதற்கான வரவுகளை எப்படிப் பெருக்குவது என்பது குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு, உற்பத்தியை நிறுத்துவது என்ன மாதிரியான நிர்வாகம்? கர்நாடக மாநில அரசின் நந்தினி பால் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகள் தமிழகத்தில் அதிகளவில் விற்பனையாவதற்கு காரணம், ஆவின் பாலின் தரக் குறைபாடா? அல்லது பாலின் கொள்முதல் விலையை மட்டும் உயர்த்திவிட்டு, அரசு முறையாக கொள்முதல் செய்யாததால் விற்பனை பாதிப்படைகிறதா? அல்லது தனியார் பால் விற்பனையைப் பெருக்குவதற்காக, ஆவின் விநியோகத்தை திட்டமிட்டே தவெக அரசு குறைக்கிறதா? தமிழகத்தில் தற்போது நடப்பது அனைவருக்குமான அரசா? அல்லது தனியாருக்கான அரசா?

இந்த நிலை மேலும் தொடருமானால், கறவைகள் வைத்திருக்கக் கூடிய விவசாயப் பெருமக்கள் முதல், அரசின் ஆவின் பாலை மட்டுமே நம்பியிருக்கும் பல ஏழை எளிய குடும்பத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வரை அனைவருமே பாதிப்புக்குள்ளாவார்கள்! எனவே, தமிழகத்தில் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டுமென முதல் அமைச்சர் விஜய்யை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.