அமெரிக்கா மீண்டும் தாக்கினால் இந்திய பெருங்கடலுக்கும் போர் பரவும்: ஈரான் ஆலோசகர் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் ராணுவ தாக்குதலைத் தொடுத்தால் இந்தியப் பெருங்கடல் வரை போர் எல்லை விரிவடையும் என்று அந்நாட்டு உச்ச தலைவரின் மூத்த ஆலோசகர் யாஹ்யா ரஹீம் சஃபாவி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் சஃபாவி பேசும்போது, “ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் ஏற்கெனவே பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து செங்கடலுக்கு பரவியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா மேலும் தாக்குதலைத் தொடர்ந்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தப் போரின் எல்லை மேலும் விரிவடைந்து இந்தியப் பெருங்கடலையும், அதற்கு அப்பாலும் சென்றடையக் கூடும்” என்றார்.
முன்னதாக, அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தால் ராணுவ உத்திகளையும் இலக்குகளையும் மாற்றுவோம் என்று ஈரானிய புரட்சிகரக் காவல்படை தலைவர் கூறியிருந்தார். பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.