📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 25, 2026 05:03 AM

3 நாள் பயணமாக அமெரிக்கா வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

3 நாள் பயணமாக அமெரிக்கா வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

3 நாள் பயணமாக அமெரிக்கா வந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங் - டிரம்ப் உற்சாக வரவேற்பு

இந்த பயணத்தில், டிரம்ப் - ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் வர்த்தகம், தொழில்நுட்பம், அரிய வகை கனிமங்கள் மற்றும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published : September 24, 2026 at 5:03 PM IST

வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பிங், மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா வந்தடைந்தார். மேரிலாண்டில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆன்ட்ரூஸ் விமான நிலையத்திற்கு வந்த ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் சென்று வரவேற்றார். டிரம்ப்பின் அழைப்பை ஏற்று, சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது மனைவி பெங் லியூவானுடன் அமெரிக்கா வந்துள்ளார்.

அமெரிக்கா வருவதற்கு முன் ஜி ஜின்பிங், சீன ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், "சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாக இருக்கக் கூடாது; மாறாக, கூட்டாளிகளாக இருக்க வேண்டும். இரு நாடுகளும் இணைந்து புதிய சகாப்தத்தில் இணைந்து செயல்படுவதற்கான சரியான வழியைக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

டிரம்ப், கடந்த மே மாதம் சீனாவுக்கு வந்திருந்தபோது, இரு நாடுகளுக்கு இடையே ஸ்திரத்தன்மையான உறவை உருவாக்குவதற்கு நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டோம். அதுவே இரு தரப்பு உறவின் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த 6 மாதங்களில் சந்தித்துக் கொள்வது இது, இரண்டாவது முறையாகும்.

இந்த மூன்று நாள்கள் பயணத்தில், டிரம்ப் - ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் வர்த்தகம், தொழில்நுட்பம், அரிய வகை கனிமங்கள் ஆகிய துறைகள் குறித்தும், அமெரிக்கா- சீனா இடையிலான உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "இதற்கு முன்பு, டிரம்ப் - ஜி ஜின்பிங் இடையிலான உச்சி மாநாடு, தென்கொரியாவின் பூசன் நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அந்த மாநாட்டில், இரு நாடுகளும் அடுத்த ஓராண்டுக்கு புதிய வரி விதிப்பதில்லை என்று முடிவு செய்தன. அந்த வரி விதிப்பு நிறுத்த ஒப்பந்தம், வரும் நவம்பரில் முடிவுக்கு வருகிறது. இந்த விவகாரம் குறித்தும், சிஃப் ஏற்றுமதி உரிமங்கள் குறித்தும் இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், 'அரியவகை கனிமங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தளர்த்தாது" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சந்திப்பின்போது, செயற்கை நுண்ணறிவு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், புதிய ஏஐ மாதிரிகளை இரு நாடுகளும் முன்கூட்டியே ஆய்வு செய்வது குறித்தும், சீனாவின் ஓப்பன் சோர்ஸ் அமைப்புகளைக் கண்காணிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு 'ஃபெண்டானில்' போதைப்பொருள் ரசாயனங்கள் விநியோகிப்பதை தடுக்குமாறு சீனாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை ஜி ஜின்பிங்கிடம் நேரில் டிரம்ப் மீண்டும் நேரில் வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பது குறித்தும் டிரம்ப் இந்தச் சந்திப்பில் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம் டிரம்ப் சீனா சென்றிருந்தபோது, அவருக்கு ஜி ஜின்பிங் சிறப்பான வரவேற்பு அளித்திருந்தார். அதற்குப் பிரதிபலனாக, தற்போது அமெரிக்காவும் சீன அதிபருக்கு முழு அரசு மரியாதையுடன் வரவேற்பை அளித்துள்ளது.