ரஜினிகாந்த், சூர்யாவுடன் மோதவில்லை.. ஓம் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த தனுஷ்
சென்னை: நடிகரும் இயக்குநருமான தனுஷ், தான் இயக்கி நடித்துவரும் பிரம்மாண்ட திரைப்படமான 'ஓம்' படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அதிகாரப்பூர்வ ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக அக்டோபர் 16ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சூர்யா படங்களின் ரிலீஸ் காரணமாக தனது படத்தின் ரிலீஸை ஒத்திவைப்பதாக தனுஷ் அறித்துள்ளார்.
தனுஷ் உருக்கம்: தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போதிருக்கும் சூழலில், ஒரு திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுவது என்பது பல்வேறு சவால்களை உள்ளடக்கிய ஒன்று. நாம் அனைவரும் பல ஆண்டுகளாக வியந்து பார்த்து ஆராதிக்கும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களின் திரைப்படம், நாங்கள் திட்டமிட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அவர் மீது நாங்கள் வைத்துள்ள அளப்பரிய மரியாதையின் காரணமாக, எங்களது 'ஓம்' திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.
தனுஷ் எடுத்த முடிவு: அதே நேரத்தில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் எங்களது திரைப்படம் வெளியாகாது. ஏனென்றால், அதே நாளில் சூர்யா சார் அவர்களின் திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. முதலில் ரிலீஸ் தேதியை அறிவித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதே நியாயமானது. பெரிய திரைப்படங்கள் தங்களுக்குள் பரஸ்பர புரிதலுடனும், ஒருவர் முடிவை ஒருவர் மதித்தும் செயல்பட வேண்டும். அதுவே திரையுலகின் வளர்ச்சிக்கு நல்லது என்பதில் நாங்கள் தீவிரமாக நம்புகிறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பட மோதலை தவிர்க்கவும், தீபாவளி பாக்ஸ் ஆபீஸில் சூர்யாவின் படத்துக்கு வழிவிடவும் தனுஷ் எடுத்துள்ள இந்த முதிர்ச்சியான முடிவு சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.