📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 25, 2026 04:03 PM

இந்தியாவில் சிங்கப்பூர் நிறுவனங்களின் பகுதி மின்கடத்தி ஆர்வம்

இந்தியாவில் சிங்கப்பூர் நிறுவனங்களின் பகுதி மின்கடத்தி ஆர்வம்

புதுடெல்லி: பகுதி மின்கடத்தித் துறையில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றிய பிறகு, திரு சபு முகமது அயூப் 2024ல் ஓய்வு பெற்றார்; சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது.

“நான் மகிழ்ச்சியாகக் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு, நன்றாகச் சாப்பிட்டும் தூங்கியும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன்,” என்று இந்தியாவில் பிறந்து சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 64 வயதான அவர் கூறினார்.

“உண்பதும் உறங்குவதும்,” என்று அவர் வலியுறுத்திச் சொன்னார்.

“இருப்பினும் இந்த நிம்மதியான ஓய்வைத் தொலைபேசியில் வரும் ஓர் அழைப்பு மாற்றியமைத்தது,“ என்றார் திரு அயூப்.

பகுதி மின்கடத்திக் கருவிகளையும் பொருள்களையும் கையாளும் ‘டூ யீ என்டர்பிரைசஸ்’ எனும் சிங்கப்பூர் நிறுவனம், இந்தியாவில் அதன் செயல்பாடுகளை வழிநடத்த ஒருவரைத் தேடிக்கொண்டிருப்பதாக அவரது நண்பர் ஒருவர் தொலைபேசியில் கூறினார்.

திரு அயூப் ஆரம்பத்தில் தயங்கினாலும் அவர் நியமிக்கப்படவுள்ள இடம் தமிழ்நாட்டில் அவரின் சொந்த ஊரான கடலூர் என்பதாலும் இந்தியாவில் வேகமாகவும் கவர்ச்சிகரமாகவும் வளர்ந்துவரும் பகுதி மின்கடத்திச் சந்தையில் ‘டூ யீ’ நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றலாம் என்பதாலும் அந்த வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

“நமது சொந்த ஊரிலேயே இந்தச் சவாலை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று யோசித்தேன்,” என்று 2025 டிசம்பரில் மனைவியுடன் சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்குக் குடிபெயர்ந்த திரு அயூப் கூறினார்.

“இந்தியாவில் ‘டூ யீ’ நிறுவனம் வளர்வதற்குப் பெருமளவு சாத்தியக்கூறுகள் உள்ளன,” என்றும் அவர் சொன்னார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தற்போது இந்தியாவில் இந்நிறுவனத்தின் கிளை மேலாளராக இருக்கிறார் திரு அயூப். புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்ற ‘செமிகான் இந்தியா 2026’ மாநாட்டில் பங்கேற்ற சிங்கப்பூர்ப் பிரதிநிதிகளில் இவரும் ஒருவர்.

இந்தியாவின் பகுதி மின்கடத்திச் சந்தை தற்போதைய 64 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2035ஆம் ஆண்டுக்குள் 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகுதி மின்கடத்தித் துறையை வலுப்படுத்த நினைக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்குச் சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் கைகொடுக்கின்றன.

“நாங்கள் பல ஆண்டுகளில் அதிக அனுபவத்தைச் சேர்த்துவைத்துள்ளோம்,” என்று சிங்கப்பூர்ப் பகுதி மின்கடத்தித் தொழிற்சங்கத்தின் நிர்வாக இயக்குநர் அங் வீ செங் தெரிவித்தார்.

2026 மாநாட்டின் சிங்கப்பூர் அரங்கில் சாதனை அளவாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த 27 நிறுவனங்கள் அவற்றின் சேவைகளைக் காட்சிப்படுத்தின. இது 2024ல் 10ஆக இருந்தது. இந்தியாவின் மீது அதிகரித்துள்ள ஆர்வத்தை இது காட்டுகிறது.

2024ல் இருந்து சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் $180 மில்லியனுக்கும் மேல் மதிப்புள்ள பகுதி மின்கடத்தி ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. மேலும் இந்தியாவில் $20 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்து, அவை 300க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளன.