📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 05, 2026 09:00 PM

ABP Nadu Exclusive: தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.. புஷ்பவனம்

ABP Nadu Exclusive: தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.. புஷ்பவனம்

ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது என்று இயல், இசை, நாடக மன்றத் தலைவரான புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கிராமிய கலைஞரான புஷ்பவனம் குப்புசாமிக்கு தமிழ்நாட்டின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அவர் ஏபிபி நாடுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது,

தவெக அரசுக்குத்தான் தமிழ் உணர்வு:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது என்று நான் சொல்வேன். இதற்கு முன்பு இருந்த அரசு நான் முயற்சி செய்தும், எனக்கு நல்ல தகுதி இருந்தும் என்னை கண்டுகொள்ளவில்லை. அதை நான் வருத்தமாகவே சொல்லியிருந்தேன். இந்த அரசு எனக்கு இந்த நியமனம் செய்திருக்கிறது.

உண்மையில் மக்களை நேசிக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக உண்மையான பணி செய்கிறது என்று நான் சொல்வேன். எனக்கு கிடைத்த பதவியாக இதை எண்ணவில்லை. என் மக்களுக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன்.

கேள்வி: கடந்த காலங்களில் அதிமுக, திமுக ஏன் இந்த அங்கீகாரத்தை உங்களுக்கு தரவில்லை என்று கருதுகிறீர்கள்?

பதில்: அதற்கு காரணம் நான் மக்களிசை பாடுகிறேன். வேறு ஒன்றும் இல்லை. மக்களிசை என்பதை நாட்டுப்புற பாடல் என்று சொல்வதால்தான் அந்த சொல்லை நான் மாற்றினேன். நாட்டுப்புற பாட்டு என்று சொல்வது சரியில்லை. மக்களிசை என்று சொல்ல வேண்டும். மக்களால் மக்களுக்கு பாடுவது மக்களிசை என்று சொல்ல வேண்டும். வடநாட்டில் லோக் கீத் என்று சொல்கிறார்கள். லோக் என்றால் மக்கள் கீத் என்றால் இசை.

அப்படி சொல்லாமல் நம் மக்கள் நாட்டுப்புற பாட்டு, டப்பாங்குத்து பாட்டு, நாட்டார் பாட்டு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். மக்களிசையை பாடுகிறேன் என்பதுதான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பது தவிர கர்நாடக இசையில் நான் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன், கலைமாமணி விருது வாங்கியுள்ளேன், கெளரவ டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியவில்லை. மக்களிசை பாடுகிறேன் என்ற ஒரே காரணத்திற்காக எனது பதவி மறுக்கப்பட்டுள்ளது. இதை முதன்மையான காரணம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: நாட்டுப்புற பாடல்களை ஏன் கடந்த ஆட்சியில் கொண்டு கொள்ளவில்லை?

பதில்: அவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் கவலையில்லை. தமிழ், தமிழ் என்று பேசுவோம். அவ்வளவுதான். தமிழர்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? அதைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை. கவலையிருந்தால் தமிழுக்காக ஒருவன் உழைக்கிறான், மக்களிசையை அரங்கில் கொண்டு வந்து ஏற்றுகிறான், இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்திருக்குமே? முயற்சி செய்தும் தரவில்லை. அதுதான் எனக்கு மன வருத்தம்.

முனைவர் பட்டம் இருக்கிறது. கலைமாமணி பட்டம் இருக்கிறது. கெளரவ டாக்டர் பட்டம் இருக்கிறது. ஆல் இந்தியா ரேடியோவில் ஏ கிரேட் ஆபீசர் நான். மக்களிசை பாடுவேன், கர்நாடக இசை பாடுவேன், மெல்லிசையை பாடுவேன். 3 ஆயிரம் மேடைகளுக்கு மேல் பாடியிருக்கிறேன். உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே. இந்த விஜய் அரசுதானே எனக்கு இதை தந்துள்ளது. மக்களிடம் இருந்து வந்து மக்கள் இசையை பாடும் எனக்கு இ்ந்த அங்கீகாரத்தை தந்துள்ளது. இதுதான் உண்மையான ஆட்சி.

கேள்வி: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரிடம் ஏதாவது கோரிக்கை வைத்துள்ளீர்களா?

பதில்: அவர்களாக அழைத்து இதை தந்துள்ளனர். அதுதான் பாராட்டுக்குரியது. அவர்களிடம் நான் கேட்காதபோது அவர்களாக இதைத் தர வேண்டும் என்று நினைத்து இந்த பதவியைத் தந்துள்ளனர்.

கேள்வி: தமிழ் உணர்வோடு உள்ள மக்களுக்கும், இசைப்பிரியர்களுக்கும் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: அந்த தமிழ் மக்கள்தான் இன்று வாக்களித்து கோட்டையில் அமரவைத்துள்ளனர். அந்த மக்களுக்காக பாடும் எனக்கு இந்த பதவியை கொடுத்தது தமிழ் மக்களுக்கே கொடுத்துள்ள ஒரு பதவிதான். இது அவர்களைப் பெருமைப்படுத்தும் விதம்தான். இது எனக்கு கிடைத்ததாக எண்ணமாட்டேன். என் மக்களின் சார்பாக கிடைத்தது.

கேள்வி: 2018ம் ஆண்டு இசைப்பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி அளிக்கவில்லை என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தீர்கள்? தற்போது கேட்காமலே பதவி அளித்துள்ளனர். இவை இரண்டையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

பதில்: தகுதி இருந்தும் எனக்குத் தரக்கூடாது என்று ஒவ்வொன்றாக உயர்த்தி, முதலில் நான் விண்ணப்பித்தபோது நான்தான் அந்த பட்டியலில் முதன்மையானவனாக இருந்தேன். அதில் குளறுபடி செய்து மீண்டும் ஒரு மாதம் நீட்டித்து மீண்டும் ஒன்றை கேட்டார்கள். அதிலும் தகுதியை நிரூபித்தேன். அதில் இருந்து ஒரு மாதம் மீண்டும் நீட்டித்து 3 மாதம் இழுத்தடித்து எனக்கு கொடுக்கக்கூடாது என்று செய்தது எடப்பாடியார் அரசு. அதற்கு பிறகு வந்த அரசும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், இந்த அரசு நான் கேட்காமலே யார் தகுதியானவர் என்று கொடுத்துள்ளனர். இந்த அரசு உண்மையிலே உழைக்கிறார்கள். மக்கள் தேர்வு செய்த முதல்வர்தான் என்னை நியமித்துள்ளார் என்பதுதான் நல்ல ஆட்சி, சிறந்த ஆட்சி என்பதற்கு உதாரணம். மனசாட்சியை அடகுவைத்துவிட்டு நான் பேசவில்லை. இந்த பதவியை அவர்கள் தராவிட்டாலும் கூட நடக்கும் விஷயங்களை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மற்றவர்களை குறை சொல்வதை விட நமக்கு நிறை செய்வதைப் பற்றி பேசுவோம்.

கேள்வி: மக்களிசைக்கு என்ன நடவடிக்கைகளில் ஈடுபட போகிறீர்கள்?

பதில்: மக்களிசை மட்டுமில்ல கர்நாடக இசை, திரையிசை உள்பட பல வரும். தெருக்கூத்து , வில்லுப்பாட்டு, கரகாட்டம் என அனைத்திற்கும் இந்த அரசு நல்லது செய்யும் என்று இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. நான் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்று விருப்பப்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி