ஆடவர்மீது மோதிய ஐவர்; காணாமல்போன $155,000
ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் நடந்துசென்ற ஆடவர்மீது மோதி அவரிடமிருந்து 155,000 வெள்ளியைச் சுருட்டிய ஐவரை வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 25) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஆர்ச்சர்ட் பகுதியில் உள்ள டேங் பிளாசா அருகில் உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் காவல்துறை சனிக்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
நாணய மாற்றுக் கடையில் பணத்தை மாற்றிக் கொண்டு மின்படிக்கட்டுக்கு அருகே வந்த நபர்மீது அடையாளம் தெரியாத சிலர் மோதினர்.
அதன் பிறகு தனது தோள்பை திறந்து இருப்பதையும் அதில் இருந்த ஏறக்குறைய 155,600 வெள்ளி ரொக்கம் காணாமல் போயிருப்பதையும் கண்டு அந்த நபர் அதிர்ச்சியடைந்தார்.
தங்ளின் காவல் நிலையத்தின் அதிகாரிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, விசாரணை நடத்தி 31 முதல் 57 வயதுக்குட்பட்ட பிலிப்பீன்ஸ் ஆடவரையும் பிலிப்பீன்ஸ் பெண்கள் நால்வரையும் அடையாளம் கண்டுபிடித்தனர்.
அதே நாளில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏறக்குறைய 152,800 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஐவர்மீதும் திருட்டில் ஈடுபட்டதாகச் சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இத்தகைய குற்றச் செயல்களைச் சகித்துக் கொள்ள முடியாது என்று கூறிய காவல்துறை, குற்றவாளிகளைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளும் எடுப்போம் என்று உறுதியளித்தது.
இதுபோன்ற சம்பவங்களில் பொதுமக்கள் பதற்றமடையாமல் அமைதியாக இருக்குமாறும், குற்றவாளியின் உருவ அமைப்பு, அடையாளங்களைக் குறித்துக் கொண்டு உடனடியாகக் காவல்துறையின் உதவியை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.