📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 26, 2026 05:03 PM

$50 மில்லியன் நிதியைத் திரட்டும்செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை

$50 மில்லியன் நிதியைத் திரட்டும்செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை

செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை, அதன் புக்கிட் பாத்தோக் வளாகத்தைச் சீரமைக்கும் மாபெரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன்மூலம் பராமரிப்பு சேவைகள் இன்னும் பரவலாக விரிவுபடுத்தப்படும். சமூகத்துடனான தொடர்புகள் வலுப்படுத்தப்பட்டு காலத்திற்கு ஏற்ற பராமரிப்பு சேவைகள் வழங்கப்படும்.

இதற்காக, தொண்டு அமைப்புகள், நிறுவனங்கள், பங்காளிகள், பொதுமக்களிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் $50 மில்லியன் திரட்டுவதற்கான ‘செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை வளாக மறுசீரமைப்பு நிதியை அம்மருத்துவமனை தொடங்கியுள்ளது.

இந்த நிதி, வளாகத்தின் சீரமைப்புக்கு மட்டுமன்றி பயிற்சி, புத்தாக்க முயற்சிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

சனிக்கிழமை (செப்டம்பர் 25) ஷாங்ரி-லா சிங்கப்பூர் ஹோட்டலில் அம்மருத்துவமனையின் 30வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற அறப்பணி விருந்து நிகழ்ச்சியில் இதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

செயின்ட் லூக்ஸ் மருத்துவமனையின் தலைமை நிர்வாகியான டான் பூன் இயோவ், எதிர்காலத்திற்கான மருத்துவமனையின் திட்டங்களை விவரித்தார்.

“சுகாதாரச் சேவை வழங்குபவராகவும், பராமரிப்பை ஒருங்கிணைப்பவராகவும் செயின்ட் லூக்ஸ் மருத்துவமனையின் பங்கை வலுப்படுத்துவதே எங்களுடைய முக்கிய நோக்கம்,” என்றார் அவர்.

2028ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் புக்கிட் பாத்தோக் வளாகத்தில் 60க்கும் மேற்பட்ட உள்நோயாளி மாற்றுப் பராமரிப்புப் படுக்கைகள் அமைக்கப்படும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2030ஆம் ஆண்டிற்குள் புதிய அலெக்சாண்டிரா மருத்துவமனையில் ஆயுளைக் குறைக்கும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் சிங்கப்பூரின் ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் மேலும் 80 படுக்கைகள் அமைக்கப்படவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான சான் சுன் சிங், சிங்கப்பூரில் தற்போது 65 வயது, அதற்கு மேற்பட்ட குடிமக்கள் 21 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருப்பதால், நாடு இப்போது மிக முதியோர் சமூகமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

“அதற்கு ஏற்ப உள்கட்டமைப்பை உருவாக்குவது, கூடுதல் கட்டடங்களைக் கட்டுவது அல்லது கூடுதல் படுக்கைகளைச் சேர்ப்பது போன்றவை எளிதானது என்றாலும் தற்போது மாறியுள்ள முதியோர்களின் தேவைகளுக்கேற்பப் பராமரிப்பு முறைகளைக் கொண்டு வருவது சற்றே சவாலானது,” என்று அவர் தெரிவித்தார்.

“முதியோர்களின் பல்வேறு தேவைகளுக்கான புதிய பராமரிப்பு முறைகளை ஆராய்வதற்குச் சிங்கப்பூரிடம் வளங்களும், யோசனைகளும் புதுமைகளும் கொண்ட மனித ஆற்றல் இருக்கிறது,” என்று கூறிய தற்காப்பு அமைச்சருமான திரு சான், “மக்களே மிக முக்கியமானவர்கள்,” என்றார்.

“நம்மிடம் சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த பராமரிப்பு முறைகள் இருக்கலாம், ஆனால் சரியான திறன்களுடனும் சரியான பராமரிப்புப் பண்புகளுடனும் மனிதர்கள் இல்லையென்றால் நாம் அடைய விரும்பும் இலக்கை அடைய முடியாது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.