📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 26, 2026 02:04 PM

சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் சாதனைகளைக் கௌரவித்த 35ஆம் சிண்டா உன்னத விருதுகள், சிங்க‌ப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் சாதனைகளைக் கௌரவித்த 35ஆம் சிண்டா உன்னத விருதுகள், சிங்க‌ப்பூர் செய்திகள்

ஆண்டுதோறும் சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கல்வி, கலை, விளையாட்டுச் சாதனைகளை அங்கீகரிக்கும் சிண்டா உன்னத விருதுகளில், கடந்த 34 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஆக அதிகமான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி அரங்கில் சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடந்த விருதளிப்பு விழாவில் 18 பிரிவுகளின்கீழ் மொத்தம் 866 பேர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இரண்டு அங்கங்களாக நடந்த விழாவில், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா முதல் அங்கத்திலும் நாடாளுமன்ற நாயகர் சியா கியான் பெங் இரண்டாம் அங்கத்திலும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

“வளர்ந்துவரும் விருது பெறுநர் எண்ணிக்கை சிங்கப்பூர் இந்திய மாணவர்கள் தொடர்ந்து முன்னேறி வருவதைக் குறிக்கிறது. இம்மாணவர்களுள் 20 விழுக்காட்டினர் நேரடியாகச் சிண்டா நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் குமாரி இந்திராணி.

சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குச் சிங்கப்பூர் இந்திய இளையர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமென்றும் அவர்களிடையே சமூகச் சேவை, பரிவு, நேர்மை ஆகிய விழுமியங்களை விதைப்பது முக்கியமென்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடக்கப்பள்ளி முதல் இளநிலைப் பட்டக்கல்வி வரையிலான மாணவர்களுக்குக் கல்விசார் விருதுகளுடன் $150லிருந்து $500 வரையிலான ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

கலைகள், விளையாட்டுப் பிரிவுகளில் அவர்களது பள்ளியளவிலும் தேசிய அளவிலும் சாதனைகள் படைத்த இளையர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்ற மாணவர்களுள் 115 பேர் இதற்கு முன்பு 2022க்கும் 2025க்குமிடையே விருது பெற்று இவ்வாண்டு மீண்டும் விருது வென்றுள்ளனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் விருது பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 10 பிரிவுகளில் அதிகரித்துள்ளது.

சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் விருது பெற்ற மாணவர்கள் மீண்டும் சிண்டாவுடன் இணைந்து சேவையாற்ற வேண்டுமென ஊக்குவித்தார்.

“இத்தகைய மாணவர்களின் பங்களிப்பு நிச்சயம் பிற இளையர்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் வாயிலாகவும் திறன்களைக் கற்பிப்பதன் வழியாகவும் அவர்கள் மற்றொரு மாணவரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,” என்றார் அவர்.

இவ்விருது நிகழ்ச்சி 1992ல் சிண்டா கல்வி உன்னத விருதுகளாகத் தொடங்கி 2008ல் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை அங்கீகரிக்கும் நோக்குடன் சிண்டா உன்னத விருதுகள் எனப் பெயர்மாற்றம் கண்டு கலை, விளையாட்டு ஆகிய துறைகளில் சாதிக்கும் மாணவர்களுக்கும் விருது வழங்கத் தொடங்கியது.

சிங்கப்பூர் இந்திய இளையர்களின் கல்விக்காகவும் வளர்ச்சிக்காகவும் சென்ற ஆண்டு சிண்டா ஏறத்தாழ 20 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்ததாகவும் அதன் பல்வேறு திட்டங்கள்வழி 10,000 பேருக்கு உதவியதாகவும் சிண்டா தெரிவித்தது.

இனிவரும் ஆண்டுகளில் இளையர்களின் கல்விக்கும் வளர்ச்சிக்குமான ஆதரவைத் தொடர்ந்து அதிகரித்து அவர்கள் தங்களது கனவுகளை எட்ட சிண்டா உதவிபுரிய முனைகிறது.