நீதிமன்ற உத்தரவுபடியே வீரமணி கைது நடந்தது; திமுகவுக்கு இபிஎஸ் வக்காலத்து
மதுராந்தகம்: வீரமணி கைது விவகாரத்தில் முதல்வர் விஜய் பொய் சொல்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது பேட்டி;
ஜெம் கிரானைட் வீரமணி மீது திமுக ஆட்சிக்காலத்திலே வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறிய போது நீதிபதி அதை ஏற்கவில்லை.
பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தவெக ஆட்சியில் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறது. உள்துறை பொறுப்பை அவர் தான் வகிக்கிறார். அந்த வகையில் ஜூன் மாதம் 19ம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. அப்போது இருந்த அதிகாரிகள் வாய்தா கேட்கும் போது, 4 வாரத்திற்கு பிறகு முழு விவரங்களையும், அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார்.
அதன் பின்னர் ஆக.3ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போதும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மீண்டும் வாய்தா கேட்கிறார்கள். ஆகஸ்ட் 27ம் தேதி வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது போலீசார், அரசு வழக்கறிஞர் ஆகியோர் தடயவியல் துறை அறிக்கை வரவில்லை என்று கூறி உள்ளனர்.
பல முறை வாய்தா வாங்கி வழக்கை இழுத்துக் கொண்டு இருக்கிறீர்கள், எனவே, உடனடியாக வீரமணியை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு வழங்குகிறார். அந்த அடிப்படையில் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதல்வரின் உத்தரவின்பேரில் வீரமணி கைது செய்யப்படவில்லை.
இதை தான் கம்யூனிஸ்ட் பெ. சண்முகம் குறிப்பிட்டார். வீரமணி அரசின் உத்தரவின் பேரில் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, தீர்ப்பின்படி நீதிமன்றம் சொல்லித் தான் கைது செய்யப்பட்டு உள்ளார். அரசியல் ஆதாயத்திற்கு தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் விஜய் சொன்னது அப்பட்டமான பொய்.
சினிமாவில் நடித்த அவர், இப்போது நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார் என்பது அம்பலமாகிவிட்டது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், 250 கொலைகள் நடந்துள்ளது. 300 பாலியல் சீண்டல்கள் நடந்திருக்கின்றன. இதற்கு எல்லாம் முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார்? மேடையில் வீர வசனம் பேசுகிறார்.
இவ்வாறு இபிஎஸ் பேட்டியில் கூறி உள்ளார்.