📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 26, 2026 07:04 PM

மிஸ்டர் கழுகு: “ஒருத்தரையும் விடாதீங்க...”

மிஸ்டர் கழுகு: “ஒருத்தரையும் விடாதீங்க...”

மிஸ்டர் கழுகு: “ஒருத்தரையும் விடாதீங்க...” - ஆக்‌ஷனில் முதல்வர்!

இடைத்தேர்தல் களத்தில், ‘த.வெ.க அரசில் தலித்துகளுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கிறது’ என்று திராவிடக் கட்சிகள் திரைமறையில் ஓ.பி.சி அரசியலை மேற்கொண்டுவருகின்றன

“முதல்வருக்குக் கோபம் வருமெனத் தெரியும். ஆனால், மேஜையை ஓங்கி அடித்துக் கோபத்தை வெளிப்படுத்தும் அளவுக்குச் செல்வாரென யாருமே எதிர்பார்க்கவில்லையாமே...” யாரிடமோ போனில் பேசிக்கொண்டு வந்தமர்ந்தார் கழுகார். அவர் பேசி முடிக்கும்வரை காத்திருந்தோம். “தொழிலதிபர் வீரமணி வழக்கு தமிழகத்தையே உலுக்கிவிட்டது. பொதுவெளியில் எழுப்பப்படும் கேள்விகளை அறிந்துகொண்ட முதல்வர், கடும் டென்ஷனில்தான் இருக்கிறார்” என்று சொல்லிவிட்டு, செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“ஜெம் வீரமணி விவகாரத்தை முழுமையாகக் கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய், ‘வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ஒருத்தரையும் விடாதீங்க. அது யாராக இருந்தாலும் சரி... அரஸ்ட் பண்ணுங்க’ என கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி விட்டாராம். காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரின் குற்றச்சாட்டுகள் குறித்துப் பொதுவெளியில் விவாதிக்கப்படும் விஷயங்களை முதல்வரே கவனித்திருக்கிறார். அதன் நீட்சியாகவே, அருண் ஐ.பி.எஸ்., கண்ணன் ஐ.பி.எஸ்., கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்ததாக, சில அதிகாரிகளைக் கைதுசெய்யவும் அரசு திட்டமிட்டிருக்கிறதாம்.”

“வீரமணி வழக்கில் இன்னும் பலர் சிக்கப்போகிறார்களாமே?”

“ஆமாம். இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வசமாகச் சிக்கியிருக்கிறார். குற்றத்தை ஒப்புக்கொண்டு, ‘என்னவெல்லாம் நடந்தது’ என வீரமணி வாய் திறந்தால், மேலும் பலர்் சிக்குவார்கள் என்கிறது காக்கிகள் வட்டாரம். ‘இந்த வழக்கிலிருந்து தப்புவதற்காக, கிழக்கு கடற்கரைச் சாலையில் தனக்குச் சொந்தமான சில சொத்துகளை விற்றிருக்கிறார் வீரமணி. அதில் வந்த பணத்தை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஒரு அதிகாரியின் பினாமிக்கு அளித்திருக்கிறார். அது தொடர்பான விசாரணை நடக்கிறது. விரைவிலேயே அந்த அதிகாரி வசமாகச் சிக்குவார்’ என்கிறார்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகள்.”

“சரிதான். அமைச்சர் வன்னி அரசு மீது த.வெ.க தலைமை கடுப்பில் இருக்கிறதாமே... என்ன விவகாரம்?”

“ம்ம்... வெளிநாடுக்குத் தப்ப முயன்ற ‘புலவர்’ பிரமுகர் சிக்கிக்கொண்டாராமே?”

“உண்மைதான். அவர்மீது லஞ்ச ஒழிப்புத் துறையிலும் அமலாக்கத்துறையிலும் வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழலில், தனக்கு ‘லுக்அவுட் சர்க்குலர்’ விடப்பட்டிருப்பதே தெரியாமல் லண்டனுக்குத் தப்ப முயன்றிருக்கிறார் ‘புலவர்’ பிரமுகர். விமான நிலைய அதிகாரிகள் சுதாரித்து, அவரின் பயணத்தைத் தடுத்திருக்கிறார்கள். அதோடு, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் ‘புலவர்’ பிரமுகர். நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு தொடர்பாக, லண்டனில் பதுங்கியிருக்கும் ரத்தீஷைச் சந்தித்து ஆலோசிப்பதுதான் ‘புலவர்’ பிரமுகரின் திட்டமாம். வழக்கின் சூடு அடங்கும் வரை ஐரோப்பாவிலேயே பதுங்கியிருக்கவும் திட்டமிட்டிருந்தாராம். அது முறியடிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், ‘புலவர்’ பிரமுகரை நசுக்கும் விஷயத்தில், ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் உறுதியாகத்தான் இருக்கின்றனராம்...”

“எல்லாம் சரி... ரத்தீஷின் பாஸ்போர்ட்டை முடக்கும் வேலையை லஞ்ச ஒழிப்புத்துறை செய்யவில்லையே... ஏன்?”

“முதல்வரே ரத்தீஷுக்கு எதிராக இருந்தாலும், ஆட்சியிலிருக்கும் சில புல்லுருவிகள் இன்னும் ரத்தீஷ் விசுவாசத்திலேயே இருக்கிறார்களாம். ரத்தீஷுக்கு எதிராக ‘லுக்அவுட் நோட்டீஸ்’ வழங்கியதோடு அமைதியாகிவிட்டனர். துபாய் கோல்டன் விசா வைத்திருக்கும் ரத்தீஷ், ஒரு வருடத்துக்கு இந்தியாவுக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. ஐரோப்பாவில் ‘லக்ஸம்பர்க்’ என்றொரு நாடு இருக்கிறது. ஐந்தரைக் கோடி ரூபாய் செலுத்தினால், ஐந்து வருடங்களுக்கு வாழும் குடியுரிமையை அந்த நாட்டில் அளிக்கிறார்கள். ‘செங்கன்’ ஒப்பந்தத்தின்படி, அந்தக் குடியுரிமையை வைத்துக்கொண்டு 29 ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியும். அந்தக் குடியுரிமையைப் பெறுவதற்கான வேலையில் இறங்கியிருக்கிறார் ரத்தீஷ். த.வெ.க ஆட்சி முடியும் வரை அவர் தமிழகத்துக்குத் திரும்பும் ஐடியாவிலேயே இல்லையாம்” என்ற கழுகாருக்கு, பனங்கற்கண்டுப் பாலை நீட்டினோம். உறிஞ்சிக் குடித்துவிட்டு அடுத்த செய்திக்குத் தாவினார்.

“இந்திய தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களில் சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி இருவரும் தேர்தல் கமிஷனின் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து, கடந்த காலங்களில் பதினான்கு முறை நடந்த ஆலோசனைக் கூட்டங்களின்போது 10 முறை ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். அவற்றைப் பொருட்படுத்தாமல் அவசர அவசரமாகப் பணிகளை முடித்திருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டியும் போராட்டக் களத்தில் குதிக்கவிருக்கிறதாம். ‘ஞானேஷ் குமார் பதவி விலகும்வரை விடக் கூடாது’ என முடிவெடுத்திருக்கின்றனவாம் மாணவர் அமைப்புகள்.”

“அது சரி... ஒரு சிறுபான்மை கல்விக் குழுமம் நில சர்ச்சையில் சிக்கியிருக்கிறதாமே?”

“ம்ம்... 2013-ல், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், திருவள்ளூரிலுள்ள தங்களுடைய எட்டு ஏக்கர் நிலத்தில் கல்லூரி கட்டிக்கொள்வதற்காக, அந்தக் கல்விக் குழுமத்துக்கு நிலத்தை தானமாக அளித்திருக்கிறார்கள். அதை ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனப் பிரமுகருக்கு பவர் கொடுத்து, நிலத்தை பிளாட் போட்டு விற்றுவிட்டார்களாம். கடந்த தி.மு.க ஆட்சியில் இந்த விவகாரம் வெடித்து வெளிவந்தபோது, ‘நான் சின்னவரோடு ஒன்றாகப் படித்தவன். யாரும் எங்க மேலே கைவைக்க முடியாது’ என்று கல்விக் குழுமத்தில் இருக்கும் சீனியர் சீறியிருக்கிறார். ஆட்சி மாறிய நிலையில், சிறுபான்மைச் சமூகப் பெரியவர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. அப்போதும், நடந்த தவறை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையாம் அந்த சீனியர். சிறுபான்மைச் சமூகப் பெரியவர்கள் மூலமாக, இந்த விவகாரம் முதல்வர் வரை புகாராகப் போயிருக்கிறது.”

“ஓ... தமிழ்நாடு பா.ஜ.க-வில் திடீரென மூன்று பேர்கொண்ட கமிட்டி போட்டிருக்கிறார்களே... என்ன விவரம்?”

“எல்லாம் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் குறித்த பஞ்சாயத்துதான். அவர்மீது திவ்யா சேஷாத்ரி என்பவர் அளித்த புகாரில், முருகானந்தத்தின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்தது பா.ஜ.க தலைமை. திவ்யாவின் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தைத் தீர விசாரித்து அறிக்கை அளிக்க, ஹெச்.ராஜா தலைமையில் மூவர் கமிட்டி அமைத்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். இந்தக் கமிட்டி அளிக்கும் ரிப்போர்ட்டை வைத்து, கருப்பு முருகானந்தத்தை மொத்தமாகவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறதாம். ‘அடுத்த மாநிலத் தலைவராகும் தகுதி எனக்கு இருப்பதால்தான், திட்டமிட்டு என்னைப் பழிவாங்குகிறார்கள்’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம் கருப்பு” என்று கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்,

“அவார்டு மாவட்டப் பொறுப்பு மாண்புமிகு, புதிதாக ஒரு வீட்டை வாங்கிப் பால் காய்ச்சியிருக்கிறார். அதோடு, அக்கம் பக்க மாவட்டங்களிலுள்ள கல்குவாரிகளையும் வாங்கிவிட பெரும் தொகையைத் திரட்டி வருகிறாராம்” என்று சொல்லிவிட்டு, சிறகுகளை விரித்து விண்ணில் பாய்ந்தார்.