📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 03:33 AM

விளையாட்டு மாடல் தவெக அரசு நெல் கொள்முதலில் அலட்சியம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

விளையாட்டு மாடல் தவெக அரசு நெல் கொள்முதலில் அலட்சியம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

விளையாட்டு மாடல் தவெக அரசு நெல் கொள்முதலில் அலட்சியம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: நெல் கொள்முதல் செய்வதில் விளையாட்டு மாடல் தவெக அரசு அலட்சியம் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த நான்கு மாதங்களாக கனகச்சிதமாக செய்து வரும் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு சொல் ஒன்று, செயல் வேறு என்ற ரீதியில் அனைத்துத் தரப்பு மக்களையும் வஞ்சித்து வருகிறது. உரிய நேரத்தில் காவிரியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததால், குறுவை சாகுபடி முழுமையாக செய்ய முடியாமல், விவசாயிகளின் இன்னலை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய அரசு.

தமிழகத்தில் சீர்குலைந்துபோன சட்டம்-ஒழுங்கினை சீர்செய்வோம் என்று மார்தட்டி பேசிவிட்டு, தறிகெட்டு ஓடும் குதிரையை போல், குற்றச் சம்பவங்கள் மேலும் மேலும் பெருகி வரும் நிலையில், செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த பொய்க்கால் அரசு, ஆட்சி இயந்திரத்தை முறையாக சுழற்றத் தெரியாமல், அனுபவமின்மை காரணமாக கை பிசைந்து நிற்கும் இந்த அரசுக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.குறைகளை சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் தவெக அமைச்சர்கள் பதில்களை சொன்னார்களே தவிர, வீணாய் போகும் நெல்மணிகளை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால், சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்-மானம்பாடி, நல்லிச்சேரி மற்றும் பல பகுதிகள், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படாமல் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.

வானத்தை வில்லாய் வளைப்போம், விண்மீன்களை பூமிக்கு கொண்டு வந்து மக்களுக்கு வெளிச்சம் தருவோம் என்பதுபோல், முடியாத அனைத்தையும் செய்து காட்டுவோம் என்று வாய்ப்பந்தல் போடுவதை இந்த அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை போக்குவது நியாய விலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசிதான். அந்த அரிசியின் ஆதாரமாக திகழக்கூடிய நெல்மணிகள் வீணாய் போவதை வேடிக்கை பார்க்கும் இந்த அரசின் போக்கை ஏற்க முடியாது. மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடும் போக்கை உடனடியாக கைவிட்டு, விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்து, விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென்று விளையாட்டு மாடல் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.